லலிதா ஜுவல்லரி கொள்ளை; முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

தினமலர்  தினமலர்
லலிதா ஜுவல்லரி கொள்ளை; முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

திருச்சி லலிதா ஜுவல்லரியில், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த வழக்கில், தேடப்பட்டு வந்த திருடன் சுரேஷ், நேற்று, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரது குடும்பத்தாருக்கு போலீசார் அளித்த நெருக்கடியை அடுத்து, இந்த முடிவை, அவர் எடுத்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா:

இதையடுத்து, 'கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகனும் விரைவில் சிக்குவார்' என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில், 2ம் தேதி நள்ளிரவு, 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு, கொள்ளை அடித்துச் சென்ற இருவர், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தனர். ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.

அடுத்த இரண்டு நாட்களில், திருவாரூரில், போலீசாரின் வாகன சோதனையில், மணிகண்டன், 32, என்பவர், 5 கிலோ நகைகளுடன் சிக்கினார். விசாரணையில், திருவாரூர், சீராத்தோப்பைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், 30, தலைமையில், அவரது சகோதரி மகன் சுரேஷ், 28, உள்ளிட்ட சிலர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கு தொடர்பாக, மணிகண்டன், சுரேஷின் தாயார் கனகவள்ளி, 51, உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான முருகன், சுரேஷ் ஆகிய இருவரையும், தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

பலே கொள்ளையனான முருகனை பிடிப்பது சிரமம் என்பது தெரிந்ததால், அவரது வலதுகை போல் செயல்பட்ட சுரேஷை பிடிப்பதில், தீவிரம் காட்டினர்.சுரேஷின் காதல் மனைவி கீதாவின் குடும்பத்தினர், பெங்களூரில் உள்ளனர். சண்முகவேல், சகாய அன்பரசு ஆகிய இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார், பெங்களூரு சென்று, கீதாவின் பெற்றோரை பிடித்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இது, தலைமறைவாக இருந்த சுரேஷுக்கு தெரியவந்தது. தான் சிக்கினால் மட்டுமே, தன் குடும்பத்தாருக்கு போலீசாரின் நெருக்கடி குறையும் என, சுரேஷ் திட்டமிட்டார்.

இதையடுத்து, வக்கீல்கள் மூலம், நேற்று காலை, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நீதிபதி விக்னேஷ் பிரபு முன்னிலையில், சுரேஷ் சரணடைந்தார். அவரை, 14 நாட்கள் சிறைக் காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.சுரேஷை, நீதிமன்ற அனுமதி பெற்று, திருச்சி அழைத்து வர, தனிப்படை போலீசார் செங்கம் சென்றுள்ளனர்.முருகன் எங்கே?லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன், மூன்று மாதங்களாக, திருச்சி அருகே வேங்கூரில் வாடகைக்கு வீடு எடுத்து, தங்கியிருந்தது தெரிந்தது.

மனைவி, மகன், மகள் ஆகியோருடன், வேங்கூர், நருங்குழி நகர் பகுதியில், ஷேக் அப்துல்கபூர் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, முருகன் தங்கி உள்ளார். செப்டம்பர், 27ல், குடும்பத்தினரை காரில் அழைத்துச் சென்று, ஊரில் விட்டு வந்துள்ளார். முருகன் மட்டும், கொள்ளைக்கு முன்தினமான, 1ம் தேதி வரை அங்கு தங்கியிருந்துள்ளார். வீட்டின் உரிமையாளர் ஷேக் அப்துல் கபூரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். 'சுரேஷ் சரண் அடைந்துள்ளதால், முருகனும் விரைவில் சிக்குவார்' என, தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

- நமது நிருபர் குழு -

மூலக்கதை