சென்னையில் ரூ3.18 கோடியில் 2 பிளாட் வாங்கிய விவகாரம்: சிபிஐ வளையத்தில் மாஜி தலைமை நீதிபதி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னையில் ரூ3.18 கோடியில் 2 பிளாட் வாங்கிய விவகாரம்: சிபிஐ வளையத்தில் மாஜி தலைமை நீதிபதி?

* புலனாய்வு அறிக்கையின்படி சுப்ரீம்கோர்ட் அதிரடி
* தமிழக மூத்த அமைச்சர் அவ்வப்போது சந்தித்தது ஏன்?
* சொத்து வாங்கியதில் நிதி பரிவர்த்தனையில் சந்தேகம்
* சிலை கடத்தல் வழக்கு நீதிபதி அமர்வு கலைப்பில் மர்மம்

புதுடெல்லி: விதிமுறைகளை மீறி சென்னையில் ரூ3. 18 கோடி மதிப்பில் 2 பிளாட் வாங்கி உள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில், மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018ல் மும்பை உயர் நீதிமன்றப் பொறுப்பு நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கிட்டத்திட்ட ஓராண்டுகாலம் பணியாற்றிய நிலையில், `தஹில் ரமானி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ. கே. மிட்டல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் தலைமை நீதிபதிகளாக மாற்றப்பட்டுள்ளனர்; நீதிபதிகள் இடமாற்றத்துக்கு, நிர்வாக நலனே காரணம்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் ஆக.

28ல் அறிவிப்பு வெளியிட்டது. ‘இடமாற்ற முடிவை கொலீஜியம் மாற்றியமைக்கப் பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தஹில்ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதையடுத்து அவர் தன் ராஜினாமா கடிதத்தை செப். 6ல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார்.

நாட்டின் பெரிய நீதிமன்றம் ஒன்றின் தலைமைப் பதவியில் இருந்த ஒருவரை, சிறிய  நீதிமன்றத்துக்குத் தலைமை தாங்க இடமாற்றம் செய்திருப்பது, அவரை  சிறுமைப்படுத்துவதாகவும், தண்டனை அளிப்பதுபோல் இருப்பதாகவும் தஹில் ரமானி தரப்பில் கூறப்பட்டது.

தஹில் ரமானி பதவி விலகுவதாகத் தகவல்கள் வெளியானவுடன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் அவரது இடமாற்றத்தைக் கண்டித்ததோடு, செப்.

9ல் நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். தஹில் ரமானியின் பணிக்காலம் 2020 அக்டோபர் மாதத்தோடு நிறைவுபெறும் நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசு தலைவரும் ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, தமிழக மூத்த அமைச்சர் ஒருவர், தஹில் ரமானியை அடிக்கடி  சந்தித்துப் பேசிய விவகாரம் குறித்தும் சர்ச்சைகள் கிளம்பின. இதற்கிடையே கொலீஜியம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்வது  தொடர்பான கொலீஜியம் பரிந்துரை குறித்து ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகின.   நீதித் துறை நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தெளிவான  காரணங்களுக்காகத்தான்; ஒவ்வொரு பணியிடமாற்றமும் பரிந்துரை செய்யப்படுகிறது.   பணியிடமாற்றத்துக்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அதை  வெளியிட கொலீஜியத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது’ என்று  தெரிவித்தது பரபரப்பாக பேசப்பட்டது.



இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் தஹில் ரமானிக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய தஹில் ரமானி, ‘‘மும்பையை ஒப்பிடும்போது சீதோஷ்ண நிலை, சாலை வசதி, உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.

சென்னையிலேயே குடியேற விரும்புவதால், இங்கு வீடு வாங்கியுள்ளோம்’’ என்று கூறினார்.
தஹில் ரமானியே, தான் சென்னையில் பிளாட் வாங்கியிருப்பது குறித்து பொதுவெளியில் பேசியதால், அதுதொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

அதுவும், உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அறிக்கை; தமிழக அமைச்சரின் சந்திப்பு போன்றவை குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளதால், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தஹில் ரமானி சொத்து வாங்கியது தொடர்பாக முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், விதிமுறை மீறப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிஐ தரப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



அதுதொடர்பாக, சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, சென்னை புறநகரில் உள்ள லோரெய்ன் டவர், செம்மஞ்சேரி பகுதியில் உள்ள திருவிடந்ைத கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு பிளாட்களை ரூ. 3. 18 கோடி மதிப்பில் வாங்கியுள்ளார். சொத்து வாங்குவது தொடர்பான நிதி பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட தனியார் வங்கி மூலம் ரூ.

1. 62 கோடி கடன் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.

1. 56 கோடி 2019 ஜூன் - ஜூலை மாதங்களில் சொந்த நிதி மூலம் செலுத்தப்பட்டது. ஆறு வங்கி கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

மூன்று கணக்கு தனது கணவருடன் கூட்டாகவும், ஒன்று அவரது தாயுடனும், ஒன்று அவரது சம்பளக் கணக்கு, மற்றொன்று மகனின் கணக்கு. இதிலிருந்து, மும்பையில் மஹிமில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ.

1. 61 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8ம் தேதி அவரது தாயுடனான கூட்டுக் கணக்கிலிருந்து அவரது கணக்கில் ரூ. 18 லட்சம் செலுத்தப்பட்டது, அடுத்த மாதத்திலேயே ரூ.

18 லட்சம் காசோலை மூலம் கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட தமிழகத்தின் சிலை திருட்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, 2018 ஜூலை மாதம் அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனின் கீழ் செயல்பட்ட சிறப்பு அமர்வு திடீரென கலைக்கப்பட்டதை புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. சிலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்த நீதிபதி மகாதேவன் தலைமையிலான பெஞ்ச், ஏன் கலைக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.

தஹில் ரமானி பல வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். நீதிமன்ற பணி நேரங்களில் குறைந்த நேரமே பணியாற்றி உள்ளார்.

தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் தஹில் ரமானியை, வெவ்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது சந்தித்து வந்துள்ளார்.

இவையெல்லாம், தஹில் ரமானி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் புலனாய்வு அமைப்பின் 5 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், முன்னாள் நீதிபதி தஹில் ரமானி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுத்துள்ளதால், வழக்குபதிவு செய்வது தொடர்பாக பணப்பரிமாற்றம் உள்ளிட்ட ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தஹில் ரமானி தரப்பு கூறுகையில், ‘இதுவரை நான் எந்தவொரு பிரச்னையிலும் கருத்துத் தெரிவிக்கவில்லை; அதுதான் நான் தொடர்ந்து எடுக்கும் நிலைப்பாடு. எனது தனியுரிமையை எனக்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டதாக தனியார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


.

மூலக்கதை