தேஜஸ் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத்

தினமலர்  தினமலர்
தேஜஸ் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத்

பெங்களூரு, :ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தில் நேற்று பயணித்தார். மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள, இலகு ரக போர் விமானத்தை, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.

இந்திய விமானப் படை, ஏற்கனவே, 40 தேஜஸ் விமானங்களை வாங்க, எச்.ஏ.எல்.,லிடம், 'ஆர்டர்' கொடுத்துள்ளது.இந்நிலையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மேலும், 83 விமானங்களை வாங்குவதற்கான, ஆர்டர் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதியுடைய இந்த விமானத்தில் பயணிப்பதற்காக, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தார்.

பின், போர் விமானி போன்ற உடை, கண்ணாடி, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்த அவர், விமானத்தின் பைலட் மற்றும் விமானப் படை துணை தளபதி, திவாரி ஆகியோருடன், தேஜஸ் விமானத்தில் பறந்தார். இந்த பயணம், 30 நிமிடங்கள் நீடித்தது. விமானம் தரையிறங்கியதும், அதில் பயணித்த அனுபவத்தை, ராஜ்நாத் சிங், செய்தியாளர்களிடம் பகிர்ந்த கொண்டார்.

அவர் கூறியதாவது:இந்த விமானத்தில் பறந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும், 'திரிலிங்'காகவும் இருந்தது; இது, நல்ல அனுபவமாக இருந்தது.இந்த நவீன விமானத்தை தயாரித்த, எச்.ஏ.எல்., மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழக அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். போர் விமானங்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த நிலை மாறி, தற்போது, மற்ற நாடுகளுக்கு, போர் விமானங்களை, நாம் ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டியுள்ளோம். கிழக்காசிய நாடுகள்,தேஜஸ் விமானங்களை வாங்க, ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

விமானப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமானத்தில், பைலட்டின் இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த அமைச்சர், முன் இருக்கைக்கு சென்று, இரண்டு நிமிடங்கள் மட்டும், விமானத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்' என்றார். தேஜஸ் விமானத்தில் பறந்த, முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்துள்ளது.

மூலக்கதை