அயோத்தி வழக்கு நேரலை; சுப்ரீம் கோர்ட் சம்மதம்

தினமலர்  தினமலர்
அயோத்தி வழக்கு நேரலை; சுப்ரீம் கோர்ட் சம்மதம்

புதுடில்லி: அயோத்தி வழக்கை, 'டிவி'யில், நேரடியாக ஒளிபரப்ப, உச்ச நீதிமன்றம் சம்மதித்துள்ளது.


உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமி -- பாபர் மசூதி நில விவகாரத்தை, அமைதியான முறையில் பேசித் தீர்க்க அமைக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை, ஆகஸ்ட் முதல், நாள் தோறும் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களில் ஒருவரான, கே.என்.கோவிந்தாச்சார்யா, 'அயோத்தி வழக்கின் விசாரணையை, 'வீடியோ' பதிவு செய்ய வேண்டும்; 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்' எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு அனுப்பி வைத்தது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது.


அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சம்மதம் தெரிவித்தது. மேலும், அயோத்தி வழக்கை நேரலை செய்வதற்கு, எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, உச்சநீதிமன்ற பதிவாளருக்கு, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

மத்தியஸ்தம் தொடர வேண்டும்:


அயோத்தி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண, உச்ச நீதிமன்றம் அமைத்த, முன்னாள் நீதிபதி, கலிபுல்லா தலைமையிலான, மத்தியஸ்த குழு, 'இந்தப் பிரச்னையில், ஒரு மித்த கருத்தை ஏற்படுத்த முடியவில்லை' என, கடந்த மாதம் தெரிவித்தது. இதையடுத்து, அயோத்தி வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தினமும் நடந்து வருகிறது. 24ம் நாள் விசாரணை நடந்த நேற்று, மத்தியஸ்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், 'அயோத்தி வழக்கில் தொடர்புடைய, 16 அமைப்புகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். இதில், நிரவ் அகாடா, சன்னி வக்பு வாரியம் ஆகிய அமைப்புகள் மட்டுமே, மத்தியஸ்தம் மீண்டும் தொடர வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளன' என, கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை