தீவிரவாதிகள் ஊடுருவல் தகவல் வெளியான நிலையில் சென்னை வரும் பாகிஸ்தான் சரக்கு கப்பல் தீவிர கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
தீவிரவாதிகள் ஊடுருவல் தகவல் வெளியான நிலையில் சென்னை வரும் பாகிஸ்தான் சரக்கு கப்பல் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவில்  பெரும் அழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்  தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் பரவி உள்ள நிலையில், சென்னைவரும்  பாகிஸ்தான் சரக்கு கப்பல்  தீவிரமாக கண்காணிக்கப்பட்டு  வருகிறது. குஜராத் கடல் எல்லையில் உள்ள சிர்கிரீக் கடல் எல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 2   படகுகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தன. இந்திய கடற்படையினர்  அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது படகில் யாரும் இல்லை. இதனால் அந்த படகில் பாகிஸ்தான்  தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என்றும்,  அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக  இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கலாம்  என்றும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் உஷாராக  இருக்கும்படி ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில், இந்தியாவை ஒட்டியுள்ள சர்வதேச கடல் எல்லை வழியாக  பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று  செல்வதாக கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ராணுவத்துக்கு தகவல்  கிடைத்தது. ‘அரியானா’ என்ற பெயர் கொண்ட கப்பலில் கெமிக்கல் டேங்கர்கள்  உள்ளன.  இதுதவிர, 21 ஊழியர்களும் உள்ளனர். இதில் 20 பேர்  பாகிஸ்தான் நாட்டை  சேர்ந்தவர்கள். ஒருவர் எத்தியோப்பியாவை சேர்ந்தவர். இவர்கள்  பாகிஸ்தானில் உள்ளவர்கள் என்பதால் சரக்கு கப்பலின் நடவடிக்கையை கண்காணிக்க இந்திய   ராணுவம் தீர்மானித்தது. இதனிடையே, இரு தினங்களுக்கு முன் இந்த   கப்பல் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியில் வந்தது.  இதையடுத்து, கடலோர காவல் படையினர், விமான படையினர்  இந்த கப்பலை  ரகசியமாக கண்காணித்தனர். தற்போது விழிஞ்ஞம் பகுதியை கடந்து சென்னை எண்ணூர் துறைமுகத்தை நோக்கி   சென்று கொண்டிருக்கிறது. 13ம்தேதி (வெள்ளி) எண்ணூர் துறைமுகத்தை   அடையும் என கருதப்படுகிறது. இதையொட்டி, விழிஞ்ஞம் கடலோர   பாதுகாப்பு படையை சேர்ந்த சி-441, சி-427 என்ற இரண்டு சிரிய கப்பல்கள்   பாகிஸ்தான் சரக்கு கப்பலை பின்தொடர்ந்து கண்காணித்து சென்றன.

மூலக்கதை