பசு என்ற சொல்லைக் கேட்டதுமே சிலருக்கு சிலிர்க்கிறது: பிரதமர் மோடி

தினமலர்  தினமலர்
பசு என்ற சொல்லைக் கேட்டதுமே சிலருக்கு சிலிர்க்கிறது: பிரதமர் மோடி

மதுரா: உத்தர பிரதேசத்தில், கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ''பசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு, பயத்தில் முடி சிலிர்த்து விடுகிறது,'' என்றார்.


ரூ.12,652 கோடி:


பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., மாநிலம், மதுராவுக்கு நேற்று வந்தார். அவரை, மாநில முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத், மதுரா தொகுதியின், பா.ஜ., - எம்.பி.,யும், 'பாலிவுட்' முன்னாள் நடிகையுமான, ஹேமமாலினி ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நடந்த விழாவில், 'சுகாதாரமே சேவை, கால்நடைகளுக்கான தேசிய அளவிலான நோய் ஒழிப்பு திட்டம், கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் மையம்' உள்ளிட்ட திட்டங்களை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

கால்நடைகள் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு, வாய் மற்றும் கால்களில் ஏற்படும் நோய்களை ஒழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, நாடு முழுவதும், மாடு, ஆடு உள்ளிட்ட, 50 கோடி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 12 ஆயிரத்து, 652 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.


நடவடிக்கை:


இந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளால், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு, தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும், 2022க்குள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த நடவடிக்கை மிகவும் அவசியம்.

பசு, ஓம்:


பசு, ஓம் ஆகிய வார்த்தைகளை கேட்டாலே, சிலருக்கு பிடிக்கவில்லை. இந்த வார்த்தைகளை கேட்டதுமே, அதிர்ச்சியில், அவர்கள் முடி சிலிர்க்கிறது. இது போன்ற வார்த்தைகளை கூறி, நாட்டு மக்களை, 16ம் நுாற்றாண்டுக்கு மத்திய அரசு அழைத்துச் செல்வதாக சிலர் கூறுகின்றனர். கால்நடைகள் இல்லாமல், கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய வைக்க முடியுமா; இதற்கு, யாரிடமாவது பதில் உள்ளதா?

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சுற்றுச்சூழலும், கால்நடைகளும் மிகவும் முக்கியம். அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்யும் பொருளாதாரத்தை நோக்கி, நாம் செயல்படுகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகே, குப்பையில் இருந்து, பிளாஸ்டிக்கை தனியாக பிரித்தெடுக்கும் பணியில், சில பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த, பிரதமர் மோடி, நேராக அங்கு சென்றார். அந்த பெண்களுடன் சேர்ந்து, தானும் தரையில் அமர்ந்தார். அவர்களுடன் பேசியபடியே, அவரும், குப்பையிலிருந்து பிளாஸ்டிக்கை பிரித்து எடுத்தார். இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோருடனும், பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பரிசு பொருட்கள் ஏலம்:

பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட, 2,700க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், செப்., 14ல் ஏலத்தில் விடப்பட உள்ளன. இதை, மத்திய கலாசாரத் துறை அமைச்சர், பிரகலாத் படேல் தெரிவித்தார். ''பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட, 2,772 பரிசுப் பொருட்கள், 'ஆன்லைன்' மூலம் ஏலத்தில் விடப்பட உள்ளன. பிரதமருக்கு அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளின் குறைந்த பட்ச விலை, 200 ரூபாயாகவும், அதிகபட்சமாக, 2.5 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, மோடிக்கு அளிக்கப்பட்ட, 1,800க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், கடந்த ஜனவரி மாதம் ஏலத்தில் விற்கப்பட்டன. இரண்டு வாரங்களாக நடந்த இந்த விற்பனையில் திரட்டப்பட்ட தொகை, கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை