அரசுக்கு எதிரான பேரணிக்கு தடை; வீட்டுக் காவலில் சந்திரபாபு, மகன்

தினமலர்  தினமலர்
அரசுக்கு எதிரான பேரணிக்கு தடை; வீட்டுக் காவலில் சந்திரபாபு, மகன்

அமராவதி: ஆந்திராவில், ஆளும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பேரணி செல்ல முயன்ற, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், அவரது அரசு பதவியேற்றது முதல், இதுவரையிலும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும், தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஆளும் கட்சியினரின் அராஜகம் மற்றும் போலீசாரின் பாரபட்ச நடவடிக்கையால், குண்டூர் மாவட்டத்தில், பல்நாடு உட்பட பல கிராமங்களில், தெலுங்கு தேசம் கட்சியினர் விரட்டப்பட்டதாகவும், அக்கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

'ஆளும் கட்சியை கண்டித்து, குண்டூர் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், செப்., 11ல், பேரணி நடத்தப்படும்' என, தெலுங்கு தேசம் கட்சி அறிவித்தது. இந்நிலையில், நேற்று காலை, தெலுங்கு தேசம் கட்சியின் பேரணிக்கு, போலீசார் தடை விதித்தனர். அமராவதியில், தெலுங்கு தேசம் தலைவர், சந்திரபாபு, மகன் நர லோகேஷ் ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்தனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற, தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, வீட்டிலேயே ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். ''மாநிலத்தில், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது. நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. ''கிராமத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே, பேரணி நடத்த இருந்தோம்,'' என்றார். இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சியை கண்டித்து, அதம்கூர் நோக்கி பேரணி நடத்த முயன்ற, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினரையும் போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை