தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்பு: ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார், முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவியேற்பு: ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார், முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஐதராபாத்: தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்றார். அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக பாஜகவின் தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இருந்து வந்தார்.

அவரின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1ம் தேதி வெளியிட்டார்.

கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தமிழிசை விடுவிக்கப்பட்டார். தமிழிசை கவர்னராக நியமிக்கப்பட்டதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ேக. எஸ். அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், கூட்டணி கட்சி தலைவர்களான தமாகா தலைவர் ஜி. கே. வாசன், தேமுதிக பொருளாளர் பிரேம லதா, சமக தலைவர் சரத்குமார், ஏ. சி. சண்முகம் உள்ளிட்டோர் தமிழிசை வீட்டுக்கே சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள தெலங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி கடந்த 5ம் தேதி சென்னை லோகையாநாயுடு காலனியில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு வந்து, கவர்னர் பதவி நியமன ஆணையை வழங்கினார்.

இதை தொடர்ந்து தெலங்கானா கவர்னராக தமிழிசை பதவி ஏற்கும் விழா இன்று (8ம் தேதி) காலை ஐதராபாத்தில் உள்ள ராஜ் பவனில் நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழிசை நேற்று இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

அவருடன் கணவர் சவுந்தரராஜன் மற்றும் குடும்பத்தினர் சென்றனர். காலை 11 மணியளவில் தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர சவுகான், தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ மூத்த தலைவர்கள் சி. பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச். ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


வகித்த கட்சி பதவி

பாஜ. வில் 1999-2001 வரை தென்சென்னை மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர், 2001- 2004 வரை பாஜ பொது செயலாளர் (மருத்துவ பிரிவு), 2004-2005 பாஜ கோட்ட பொறுப்பாளர் (மூன்று மாவட்டம்), 2005-2007 வரை அகில இந்திய சக அமைப்பாளர் (மருத்துவ பிரிவு) மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர், 2007-2010 வரை மாநில பொதுச் செயலாளர், செய்தி தொடர்பாளர், 2010-2013 வரை மாநில துணை தலைவர், 2013-2014 வரை தேசிய செயலாளர், 2014 முதல் தமிழக பாஜ தலைவராக பதவி வகித்து வந்தார். தமிழிசை 2006, 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும், 2009ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதேபோல் கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2017ம் ஆண்டு மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், அலுவல் சாரா இயக்குநராகவும் தமிழிசை பதவி வகித்துள்ளார்.

மருத்துவ குடும்பம்

தமிழிசை, குமரி அனந்தன்-கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகள்.

1961 ஜூன் 2ல் பிறந்தவர். தமிழிசை சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை மகப்பேறு மருத்துவ படிப்பு படித்தவர்.

கணவர் சவுந்தரராஜன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர். மகன், மகள் உள்ளனர்.

இருவரும் மருத்துவர்கள்.

தமிழிசை சென்னை சாலிகிராமம் லோகையாநாயுடு காலனியில் வசித்து வருகிறார்.

.

மூலக்கதை