திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு முதல் வகுப்பு வசதி; இன்று காலையில் மனைவி, மகன் சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு முதல் வகுப்பு வசதி; இன்று காலையில் மனைவி, மகன் சந்திப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரத்தை மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இன்று காலை சந்தித்து பேசினர். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

சிறை உணவையே சாப்பிட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர், தங்களின் ஐ. என். எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.

அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆலோசகராக செயல்பட்டுள்ளது.

இதையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு மொரீஷியசில் இருந்து சுமார் ரூ. 305 கோடி அன்னிய முதலீடு பெறப்பட்டது. அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று தந்ததற்காக, கார்த்தி சிதம்பரம் நிறுவனத்துக்கு பெரும் தொகை கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், கடந்த மாதம் 21ம் தேதி ப. சிதம்பரத்தை அவரது வீடு புகுந்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மறுநாள் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மொத்தம் ஐந்து முறையென மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று பிற்பகல் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ப. சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, நீதிபதி வெளியிட்ட உத்தரவில், “ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரத்திற்கு வரும் 19ம் தேதிவரை அதாவது 14 நாட்கள் நிதிமன்ற காவல் விதிக்கப்படுகிறது’’ என்றார். இதையடுத்து ப. சிதம்பரம் நேற்று மாலை திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் தனக்கு மேற்கத்திய பாணி கழிவறை, கட்டில், மெத்தை, தனது அறையிலேயே குளிக்கும் அறை, படிப்பதற்காக புத்தகம் வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

அதைத் தொடர்ந்து, திகார் சிறையில் பி. பிளாக் 7வது நம்பர் சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரத்திற்கு சில சலுகைகள் செய்து தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வசதியை 24 மணி நேரமும் கொடுக்க வேண்டும்.

இதைத்தவிர அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் காவல் துறை செய்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தொலைக்காட்சி வேண்டுமென ப. சிதம்பரம் கேட்டால் நீதிமன்ற அனுமதியுடன் சிறைத்துறை அதிகாரிகள் செய்து தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், சிதம்பரத்தை அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இன்று காலையில் அதிகாரிகள் அனுமதியுடன் சந்தித்துப் பேசினர். அப்போது சிதம்பரத்துக்கு தேவையான ஆடைகள், ஒரு சில வரலாறு சார்ந்த புத்தகங்களை அவரிடம் கொடுத்தனர்.

இதைத்தவிர இந்த வழக்கில், அடுத்த கட்ட நகர்வை எப்படி மேற்கொள்வது, முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யலாமா, இதில் ஒருவேளை, அமலாக்கத்துறை கைது செய்ய தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் விசாரணைக்காக கைது செய்யலாம்.

அவ்வாறு கைது செய்ய முயன்றால் சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

நேற்று இரவு சிதம்பரம் சிறை அதிகாரிகள் வழங்கிய ரொட்டி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டன. அதை அவர் சாப்பிட்டார்.

இன்று காலை 6 மணிக்கு கைதிகள் தங்களது அறையில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலையில், சிறைச்சாலையில் வழங்கிய காலை உணவை சிதம்பரம் சாப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு மாறாக இரண்டு தடவைக்கு மேல் அவருக்கு விருப்பமான டீயை கேட்டு வாங்கி குடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வெளியிலிருந்து எந்த வித உணவும் வழங்க அனுமதி கிடையாது.

சிதம்பரத்தை சந்திக்க மனைவி, ரத்த உறவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக திகார் சிறைத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதனால் அவரை சந்திக்க வந்த காங்கிரஸ் தொண்டர்கள் வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

வெளித்தோற்றத்தில் சிரித்த முகத்துடன் காணப்பட்டாலும், சிதம்பரம் சிறையி–்ல் முகம் வாடியநிலையில் சோகமாக இருந்துள்ளார். முன்னதாக நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று காலை எழுந்ததும்,  பாதுகாப்பு காவலர்களிடமோ சிறைத்துறை அதிகாரிகளிடமோ எதுவும் பேசாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

சிறை வளாகத்தில் கேன்டீன் உள்ளது. அங்கு நொறுக்குத்தீனி வாங்கிக் கொள்ளலாம்.

இதற்காக ஆயிரம் ரூபாய்க்கு முன் பணம் கட்ட வேண்டும். மாலை 6 மணிக்கு சிறை கைதிகள் அனைவரும் தங்களது அறையில் அடைக்கப்படுவார்கள்.

சோனியா நலம் விசாரிப்பு

இந்நிலையில் சிதம்பரத்தை சந்திக்க சென்ற கார்த்தியிடம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, செல்போனில் அழைத்து  நலம் விசாரித்துள்ளார்.

மேலும் சிறையில் உள்ள சிதம்பரம் எந்த  சூழலில் உள்ளார். மனஅழுத்தத்தில் இருக்கிறாரா.

ஏதேனும் குறைகள் உள்ளதா என்பதை அறிந்து தனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார். மேலும் இந்த கைது நடவடிக்கை மிகுந்த வருத்தமளிப்பதாகவும், கவலைப்பட வேண்டாம் என்று எனது சார்பில் ஆறுதல் கூறுங்கள் என்று கார்த்தியிடம் கூறினார்.

சிதம்பரத்தை சந்தித்தபின், அவர் இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை