பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: இன்று வழங்கப்படுகிறது

தினகரன்  தினகரன்
பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: இன்று வழங்கப்படுகிறது

புதுடெல்லி: பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு போர்க்கால வீர சாகச விருதான வீர் சக்ரா விருது இன்று வழங்கப்படுகிறது. புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாத  தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தாக்குதல் நடத்தி அழித்தது. இதற்கு  பதிலடியாக மறுநாள் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள், இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயன்றன. அப்போது அவர்களை மிக் 21 ரக போர் விமானத்தில் விரட்டி சென்ற சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை  கமாண்டர் அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். அப்போது, அவரது மிக் 21 விமானத்தை பாகிஸ்தான் ஏவுகணை தாக்கியது. இதில் சுதாரித்த அபிநந்தன் முன்கூட்டியே விமானத்தில் இருந்து  பாகிஸ்தான் பகுதியில் குதித்து உயிர் தப்பினார். அவரை சிறை பிடித்த பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த மார்ச் 1ம் தேதி விடுவித்தது. விமானத்தில் இருந்து குதித்ததால் உடலில் காயம் பட்ட அபிநந்தனுக்கு மீண்டும் விமானத்தை இயக்க உடல்தகுதி இல்லாமல் இருந்தார். பின்னர் பணியில் சேர்ந்துள்ள அவரை இந்திய விமானப்படை சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் வீரசாகச  செயலுக்கான விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன்படி அபிநந்தன் சாதனையை பாராட்டி வீர் சக்ரா விருது இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.  போர்க்காலத்தில் வீரர்களின் வீரசெயலை பாராட்டி மிக உயரிய விருதாக பரம்வீர்  சக்ரா மற்றும் மகாவீர் சக்ரா  வழங்கப்படும் நிலையில், 3வது வீர விருதான வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தவிர, குல்காமில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்தியாகம் செய்த  இந்திய வீரர் பிரகாஷ் ஜாதவ் மற்றும் வீர சாகசம் செய்த சிஆர்பிஎப் துணை கமாண்டர் ஹர்ஷ்பால் சிங் ஆகியோருக்கு கீர்த்தி சக்ரா வழங்கப்படுகிறது. மேலும் 14 பேருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கப்படுகிறது.

மூலக்கதை