கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் மனு இன்று விசாரணை

தினமலர்  தினமலர்
கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் மனு இன்று விசாரணை

புதுடில்லி: கர்நாடக சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர மனுவாக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த, சங்கர், நாகேஷ் ஆகிய சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக, ஏற்கனவே சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தனர்.இவர்கள் இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:

நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி, கவர்னர் உத்தரவிட்டும், முதல்வர் குமாரசாமி, அதை அலட்சியப்படுத்துகிறார். குமாரசாமி அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது.இந்த சூழ்நிலையிலும், கர்நாடக முதல்வரும், அமைச்சர்களும், தொடர்ந்து நிர்வாக ரீதியிலான உத்தரவை பிறப்பித்து, அதை செயல்படுத்தி வருகின்றனர்.
பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. பெரும்பான்மை இல்லாத அரசுக்கு, அரசியலமைப்பு சட்டப்படி, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை.நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதை, ஆளும் கூட்டணியினர், வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதப்படுத்துகின்றனர்.எனவே, உடனடியாக நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தும்படி, உத்தரவிட வேண்டும். இந்த மனுவை, அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று பரிசீலனைக்கு வந்தது.அப்போது, சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி, மனுவை அவசரமாக விசாரிக்கும்படி கோரிக்கைவிடுத்தார்.இதையடுத்து, 'இந்த மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை.'இது போன்ற விஷயங்களை, இதற்கு முன், அவசரமாக விசாரித்தது இல்லை. இன்று இது குறித்து விசாரிக்கலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை