மாவட்டங்களுக்கு இடையே பயணம்: அறிகுறி இருந்தால் பரிசோதனை

தினமலர்  தினமலர்
மாவட்டங்களுக்கு இடையே பயணம்: அறிகுறி இருந்தால் பரிசோதனை

சென்னை: சென்னை பெருநகர பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்திற்கு வருவோருக்கு கொரோனா நோய் அறிகுறி இருந்தால் மட்டும் மருத்துவ பரிசோதனை செய்யலாம்' என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இன்று முதல் பஸ் போக்குவரத்து துவங்குகிறது. போக்குவரத்து துறையில் ஏழாவது மண்டலத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்கள்; எட்டாவது மண்டலத்தில் சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன.

இவ்விரு மண்டலங்கள் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே வெளியூர்களிலிருந்து வரும் பயணியருக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
* மண்டலத்திற்குள் இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் பஸ் ரயில் போன்றவற்றில் செல்ல 'இ- - பாஸ்' தேவையில்லை. இவ்வாறு வருவோர் ஒவ்வொருவரையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.
* சென்னை தவிர்த்து ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு வருவோருக்கு கொரோனா நோய் அறிகுறி இருந்தால் மட்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் எந்த வாகனத்தில் வந்தாலும்
'இ- பாஸ்' அவசியம்.

* சென்னையிலிருந்து வேறு மண்டலத்திற்கு செல்வோர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்; இ- - பாஸ் அவசியம்.
* நோய் தொற்று உறுதியானால் மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல வேண்டும். நோய் தொற்று இல்லையென்றால் வீட்டில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். தொழில் நிமித்தமாக சென்று 48 மணி நேரத்திற்குள் திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லை.
* பிற மாநிலங்களிலிருந்து ரயில் மற்றும் விமானத்தில் வருவோர் கண்டிப்பாக 'இ- பாஸ்' பெற்றிருக்க வேண்டும்
* மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி மாநிலங்களில் இருந்து வருவோர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இவை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து வருவோரில் நோய் அறிகுறி உள்ளோருக்கு மட்டும் பரிசோதனை செய்தால் போதும்
* பரிசோதனையில் நோய் தொற்று உறுதியானால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். நோய் தொற்று இல்லையென்றால் 14 நாட்கள் அவர்கள் வீடு அல்லது அரசு முகாம்களில் தனிமைப்படுத்த
வேண்டும்.
* நோய் பாதிப்பு இல்லாத மாநிலங்களிலிருந்து வருவோர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாவிட்டால் அரசு முகாமில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தினால் போதும்.
இவ்வாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை