நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு

தினகரன்  தினகரன்
நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு

புதுடெல்லி: நாட்டில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 265 பேர் உயிரிழந்தனர். பாதிப்பு எண்ணிக்கையும் முதல் முறையாக 8 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 67  நாட்கள் முடிந்த நிலையில், வைரசால் பாதிக்கப்பட்டு 86,422 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதே நேரம் 82,369 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 11,264 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்து வருபவர்களின் சதவீதம் 47.40 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கொரோனா தாக்கத்தினால் நேற்று ஒரே நாளில் 265 பேர் இறந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 116, டெல்லியில் 82, குஜராத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 13, தமிழ்நாட்டில் 9, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 4 பேர் உள்பட 265 பேர் இறந்துள்ளனர். இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,098 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 980, டெல்லியில் 398, மத்தியப் பிரதேசத்தில் 334, தமிழ்நாட்டில் 154 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கையில் நாட்டில் தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4,971 ஆக இருந்தது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 7,964 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதித்தோரின் எண்ணிக்கை 1,76,763 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்க்கிலும் ஆர்கானிக்: விற்பனை சக்கைப்போடுபுவனேஸ்வர்: ஒடிசாவின் அரசு நிறுவனமான உத்காலிகா ஹேண்ட்லூம் நிறுவனம்தான் இந்த ஆர்கானிக் மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது. சம்பல்புரி பருத்தி துணியால் கைகளால் இந்த மாஸ்க் நெய்யப்படுகிறது. அதில் ஆர்கானிக் சாயம் போடப்பட்டு பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்த துணி மிக மிருதுவாக இருப்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், பலமுறை துவைத்து உபயோகப்படுத்த முடியும் என்பதால் ஆர்கானிக் மாஸ்க்கின் விற்பனை சக்கைப்போடு போடுவதாக உத்காலிகா நிர்வாக இயக்குநர் அஞ்சனா பாண்டா கூறி உள்ளார்.அவர் கூறுகையில், ‘‘துணியால் ஆன மாஸ்க்கை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமென டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சமயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஆர்கானிக் மாஸ்க் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார். மேலும், மாஸ்க் தயாரிப்பு மற்றும் விற்பனையின் மூலம் சிறு குறு கைவினைஞர்களும், சுய உதவிக்குழு பெண்களும் பலனடைவர் என உத்காலிகா கூறுகிறது.

மூலக்கதை