கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம்

தினமலர்  தினமலர்
கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம்

சென்னை: ''தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை, அரசு அறிவிக்கும்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.சென்னை, புளியந்தோப்பு பகுதியில், குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த, 1,400 படுக்கை வசதி உடைய மையத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று திறந்து வைத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:சென்னையில், நான்கு அரசு மருத்துவமனைகள், அத்துடன், 10 கல்லுாரிகள், கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது, 1,400 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு மையத்தில், 'ஆக்ஸிஜன்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. டாக்டர், நர்ஸ்கள், மருந்தாளுனர்களுக்கு தனி அறைகளும் உள்ளன. இங்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு, ஆபத்தில்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவர்.
மேலும், வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன், நோயாளிகள் சிகிச்சை பெறலாம். மாநகராட்சியின், 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனி காய்ச்சல் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் உடனே வந்தால், அவர்கள் வாயிலாக, மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.
ஆரம்பத்தில் தொற்று கண்டறிய, ஒரு பரிசோதனை; சிகிச்சைக்கு பின், 14 நாட்கள் கழித்து, ஒரு பரிசோதனை என, மூன்று கட்ட பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாதிப்பு கண்டறியப்பட்டால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைப்படி, ஓரிரு பரிசோதனை செய்யப்படுகிறது.
பாதிப்பு கண்டறியப்பட்ட குடும்பத்தினரை சார்ந்தவர்கள், தொடர்பில் இருந்தவருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால், பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளது.தனியார் மருத்துவமனைகளில், கொரோனாவிற்கு அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

எனவே, மருத்துவமனையின் வசதிக்கேற்ப, கட்டணம் நிர்ணயித்து, ஓரிரு நாட்களில், அரசு அறிவிப்பு வெளியிடும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனைக்கு, 4,500 ரூபாய், மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.
அந்த ஆய்வகங்களில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், 2,500 ரூபாய் என்ற கட்டணத்தில், பரிசோதனை செய்யலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேடி பிடிக்கிறோம்!

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னையில், கொரோனாவால், நேற்று முன்தினம் வரை, 13 ஆயிரத்து, 362 பேர் பாதிக்கப்பட்டு, 6,895 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவ வல்லுனர்கள் அறிவுரைப்படி, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில், தெரு தெருவாக, கொரோனா நோயாளிகளை தேடி பிடிக்கிறோம்.
இதன் வாயிலாக, பாதிப்பு கண்டறியப்பட்ட நபர்களிடமிருந்து, மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையால், சில நாட்களுக்கு பாதிப்பு அதிகரித்து காணப்படும். எண்ணிக்கையை வைத்து, பொது மக்கள் அச்சப்பட வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை