போர்க் கப்பல்களை பாதுகாக்க வேண்டும்: கடற்படை தளபதி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
போர்க் கப்பல்களை பாதுகாக்க வேண்டும்: கடற்படை தளபதி எச்சரிக்கை

உலகளவில் போர்க் கப்பல்கள், சுற்றுலா கப்பல்களில் கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. அமெரிக்க போர்க் கப்பல்களில் ஏராளமான வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்படை வீரர்களிடம் காணொளி காட்சி மூலமாக கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் நேற்று பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், ‘‘கொரோனா கொள்ளை நோய் பாதிப்பு,  இந்தியா உட்பட உலகம் முழுவதும் மிக மோசமாக உள்ளது. இந்த நோயின் அபாயம் உண்மையானது, வியக்கத்தக்கது. நமது போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றில் கொரேனா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அனைத்து வீரர்களும் முகக் கவசம் அணிய வேண்டும். நம்மில் பலர் குடும்பங்களை பிரிந்து இருக்கிறோம். ஆனாலும், அரசுக்கு உதவியாக செயல்பட நமது போர்க் கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளன. கொரோனாவுக்கு எதிரான நீண்ட கால போராக இது  இருக்கும். முடக்க காலம் முடிந்ததும், நம் வீரர்கள் வேறு இடங்களுக்கு செல்லும் போது மொத்தமாக செல்லக் கூடாது. நிலைமை மோசமானால், கடற்படை தளங்களை தனிமை வார்டாக மாற்றவும் நாம் தயாராக இருக்க வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை