கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு 15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு 15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதியுதவியை வழங்கி வருகிறது. சமீபத்தில், 20-21ம் ஆண்டுக்கான ஒதுக்கப்பட்ட ரூ.29 ஆயிரம் கோடி மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ஒரு பகுதியை மாநில அரசுகளுக்கு விடுவித்தது. நேற்று அவசர நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்கியது.இது பற்றி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள், கூடுதல் தலைமை செயலாளர்கள், சுகாதாரத் துறை ஆணையர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தடுக்க, தேசிய மற்றும் மாநில அளவில் உள்ள சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை வாங்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பரிசோதனைக் கூடங்களை அமைக்கும் நோக்கத்தோடும், மத்திய அரசு ₹15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்கள் 3 கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளன. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மேற்கொள்ளப்படும் முதல் கட்ட பணிகளுக்கு தேவையான நிதியை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அளிக்கும்.இந்த முதல் கட்ட பணியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனைகள், தனிமை வார்டுகள், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் சப்ளையுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு), பரிசோதனைக் கூடங்கள், கூடுதல் பணியாளர்களை நியமிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கவச உடை, என்-95 முக கவசம் மற்றும் வென்டிலேட்டர்கள் வாங்கவும் மத்திய நிதியை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், மற்றும் பொது சொத்துக்களின் மீது கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை