முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: 11ம் தேதி முக்கிய முடிவு மோசமான நிலை உருவாகி உள்ளதால் கொரோனா ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு?

தினகரன்  தினகரன்
முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: 11ம் தேதி முக்கிய முடிவு மோசமான நிலை உருவாகி உள்ளதால் கொரோனா ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு?

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றி, நாளை மறுதினம் (11ம் தேதி) அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது பற்றி அவர் முக்கிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார். மேலும், கொரோனா வைரசால் நாட்டில் மோசமான நிலை உருவாகி இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வீரியமடைந்து வருகிறது. தற்போது, நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி விட்டது. 150 பேர் பலியாகி உள்ளனர். நோய் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மத்திய அரசு, வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. வரும் 14ம் தேதியோடு இந்த ஊரடங்கு முடியும் நிலையில், வைரசின் பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. சமூக தொற்று எனப்படும் 3ம் நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. அதன் அறிகுறியாகத்தான், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதனால், முழு ஊடரங்கை நீட்டிக்க வேண்டுமென மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு ஒருபடி மேலே சென்றுள்ள பஞ்சாப் மாநில அரசு, வரும் 30ம் தேதி வரை தனது மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து நேற்று தானாகவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது பற்றி மத்திய அரசு மட்டங்களில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே, மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை கேட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க,  நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் இருந்து நடந்த இந்த கூட்டத்தில், மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர். இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சேர்த்து 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீத கிருஷ்ணன் மற்றும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, சிவசேனா, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதலில் இக்கூட்டத்தில் பங்கேற்க மறுத்த திரிணாமுல் காங்கிரசும் பின்னர் பங்கேற்றது. அக்கட்சி சார்பில் சுதிப் பந்தோபாத்யாய் பங்கேற்றார். இதுபோல், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பது இதுவே முதல் முறை. கூட்டத்தில், மாநில அரசுகளின் கோரிக்கைபடி ஊரடங்கை நீட்டித்தால், அதன் காரணமாக ஏற்படும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பது எப்படி? பாதிக்கப்படும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நிவாரண நிதி அறிவிக்கலாமா? நாட்டின் அத்தியாவசிய பொருள் கையிருப்பு, விநியோகம், மருத்துவ வசதிகள் உள்பட பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்தும், ஊரடங்கை தளர்த்தினால், அதன்பின் நிலைமையை எவ்வாறு கையாள்வது? எவ்வாறு படிப்படியாக ஊரடங்கை தளர்த்துவது? பொருளாதார பாதிப்புகளில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்தும்  அதை தொடர்வதன் அவசியம் குறித்தும் பிரதமர் மோடி அவர்களுக்கு விளக்கினார். ஊரடங்கை  ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்க வேண்டுமென சில தலைவர்கள்  வலியுறுத்தினர். ஊரடங்கை  நீட்டிக்கலாம் என காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியும் தெரிவித்தார். இதன் மூலம், ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை மத்திய அரசு நீட்டிக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘‘நாட்டில் தற்போது சமூக அவசரநிலை என்ற மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது.இந்த சூழலில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். பல்வேறு மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், நிபுணர்கள் ஊரடங்கை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே அரசின் தலையாய பணி.  கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற அரசு உறுதி பூண்டுள்ளது,” என்றார்.மேலும், ஊரடங்கு நிலவரம் பற்றி கடந்த 2ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தற்போது, 2வது முறையாக நாளை மறுதினமும் (11ம் தேதி) மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநில முதல்வர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அன்றைய தினமே மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.‘பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி தர வேண்டும்’:பிரதமருடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு பிஜு ஜனதா தள  எம்பி பினாகி மிஸ்ரா அளித்த பேட்டியில், ‘‘ஊரடங்கு உத்தரவு வரும் 14ம்  தேதிக்கு  பிறகு தளர்த்தப்படாது என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தி  விட்டார்.  கொரோனாவுக்கு முன்பும், பின்பும் வாழ்க்கை ஒரே மாதிரியானதல்ல என்றும் அவர் கூறினார்,’’ என்றார்.மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘கூட்டத்தில் பங்கேற்ற 80 சதவீத கட்சிகள் ஊரடங்கை நீட்டிக்கும்படி வலியுறுத்தின. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவி  அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது,’’ என்றார்.

மூலக்கதை