தொகுதி மேம்பாட்டு நிதியை பெற மறுக்கும் டெல்லி அரசு: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுப்பதாக பாஜக எம்.பி கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
தொகுதி மேம்பாட்டு நிதியை பெற மறுக்கும் டெல்லி அரசு: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறுப்பதாக பாஜக எம்.பி கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு

டெல்லி: ஆட்கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4421 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 354  பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 114 பேர் உயிரிழந்த நிலையில், 325 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்  போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைபோல், மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தனர். அரசின் கோரிக்கையைடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள்,  சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர்  தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் வழங்கியிருந்தார். மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு டெல்லி அரசு நிதி தேவை என கூறியிருந்த நிலையில் தனது தொகுதி மேம்பாட்டு  நிதியில் இருந்து வழங்குவதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தனது நிதியுதவி டெல்லி அரசுக்கு மாஸ்க் போன்ற உபகரணங்கள் வாங்க பயன்படும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக  தனது இரண்டு வருட சம்பளமாக 50 லட்சத்தை கௌதம் கம்பீர் வழங்கியிருந்தார். தற்போது மீண்டும் 50 லட்சம் அளித்ததன் மூலம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அவர் ஒரு கோடி நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும், கொரோனா நிவாரணத்திற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாஜக எம்பி கவுதம் கம்பீர் 1 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், தற்போதைய தேவை பாதுகாப்பு உபகரணங்கள் தானே தவிர பணம் அல்ல என முதலமைச்சர்  அரவிந்த் கெ​ஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லி அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக தமது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த மறுப்பதாக கம்பீர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர்,  மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான சுய பாதுகாப்பு உபகரணங்களைப் பெற உதவி செய்தால் நலமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

மூலக்கதை