கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 4,067-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் பேட்டி

தினகரன்  தினகரன்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு; மொத்த எண்ணிக்கை 4,067ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் பேட்டி

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,067-ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் கொரோனா தன் கோரப்பிடியில் சிக்க வைத்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  கடந்த மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும் வைரஸ் தாக்கல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக செய்ய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலர்; இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,076-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 693 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள். கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 291 பேர் குணமடைந்த நிலையில்; 3,667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் ஆண்கள் 76% பேரும், பெண்கள் 24% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தோற்றால் உயிரிழந்தவர்களின் 63 சதவீதம் பேர் முதியவர்கள். கொரோனா பாதித்தவர்களில் 47% பேர் 0 வயதுக்கு குறைவானவர்கள். கொரோனா பாதித்தவர்களில் 37 சதவீதம் பேர் 40 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளில் 19 சதவீதம் பேர் 60 வயதுக்கு ஏற்பட்டவர்கள். கொரோனாவால் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர்; தேசிய சுகாதார பணி நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ரூ.1,100 கோடி அளிக்கப்பட்டுள்ளது; இன்று மேலும் ரூ.3,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 5 லட்சம் சோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது; ஏப்ரல் 8-9 தேதிகளில் 2.5 லட்சம் கிட் வழங்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் லாக் டவுனின் போது, இது வரை 16.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 13 மாநிலங்களில், 1.3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 8 மாநிலங்களில், 1.32 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை