21 நாள் ஊரடங்கு முடிந்தபிறகு மத்திய அரசின் திட்டம் என்ன? குழப்பத்தை தவிர்க்க காங். கோரிக்கை

தினகரன்  தினகரன்
21 நாள் ஊரடங்கு முடிந்தபிறகு மத்திய அரசின் திட்டம் என்ன? குழப்பத்தை தவிர்க்க காங். கோரிக்கை

புதுடெல்லி: ஊரடங்கு பற்றி மாநில அரசுகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மிகப்பெரிய தவறு செய்த மத்திய அரசு, 21 நாள் ஊரடங்குக்குப் பிறகு என்ன செய்யப் போகிறது என்ற திட்டத்தை இப்போதே தெரிவித்து குழப்பத்தை தவிர்க்க வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. காங்கிரசின் மூத்த தலைவரான வீரப்ப மொய்லி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், கொரோனா பரிசோதனைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளாத வரை இப்பிரச்னையை நாம் சமாளிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். மேலும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளிடம் தெரிவித்து தயார்படுத்தி இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் பிரதமர் மோடியும், மத்திய அரசும் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டது. ஏதோ ஓர் அதிர்ச்சியை போல் அறிவித்தனர். அதோடு இதில் வேறு பல குழப்பங்களும் உள்ளன. நாடு முழுவதும் முடக்கம் என்பது, பொருளாதார அவசரநிலை மற்றும் சுகாதார அவசரநிலை இரண்டும் சேர்ந்ததாக இருந்திருக்க வேண்டும். இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் போர் சூழலுக்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. நாம் அப்படி செய்யவில்லை.  ஒருவேளை, 21 நாள் ஊரடங்கு முடிந்த பிறகு, அடுத்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? அதன்பின் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது, என்னென்ன மாற்றம் செய்யப் போகிறது என்பதை இப்போதே தெளிவாக சொல்ல வேண்டும். அதையும் திடீரென கூறினால் குழப்பமே மிஞ்சும். 130 கோடி மக்களும் அவர்களை தயார்படுத்திக் கொள்வதை மர்மமாகவே வைத்திருக்கக் கூடாது. 130 கோடி மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அனைத்து மக்களையும் தயார்படுத்த தேவையான ஒத்துழைப்பை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை