குணமடைந்ததும் வீட்டிற்கு வர வேண்டும்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு அமித்ஷா அழைப்பு

தினகரன்  தினகரன்
குணமடைந்ததும் வீட்டிற்கு வர வேண்டும்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சிஐஎஸ்எஃப் வீரர்களுக்கு அமித்ஷா அழைப்பு

டெல்லி: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனாவால் 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 1,201,443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், தற்போது வரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3374 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையே, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தங்கியிருந்த முகாமில் துணை ராணுவத்தின் 152 வீரர்கள் முகாமில்  இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து வீரர்களை பாதுகாப்பாக வைத்திருக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மும்பையில் உள்ள  கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், வீரர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குணமடைந்ததும் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நீங்கள் ஒரு நல்ல கடமையைச் செய்துள்ளீர்கள். நீங்கள்  குணமடைய நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். நம்பிக்கையை இழக்காதீர்கள். மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். கடவுள் உங்களுக்கு உதவுவார். உறுதியுடன் இருங்கள் மற்றும் கொரோனா வைரசுக்கு  எதிராக போராடுங்கள் என்று அமித்ஷா வீரர்களிடம் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த வீரர் ஒருவர், ‛ஐயா நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், நாங்கள் கொரோனா வைரசை தோற்கடிப்போம் என பதிலளித்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததும் தங்கள் வீட்டிற்கு வருமாறு அமித்ஷா  அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலளித்த ஒரு வீரர், ‛நான் நிச்சயமாக உங்களை பார்க்க வருவேன். ஜெய்ஹிந்த் சார்,\' என்று கூறியுள்ளார்.

மூலக்கதை