அமெரிக்காவில் இருந்து ஒடிசா வந்ததால் முதல்வரின் சகோதரிக்கு கோரன்டைன்: மகாராஜா குடும்பத்தினருக்கு தனிமை கண்காணிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் இருந்து ஒடிசா வந்ததால் முதல்வரின் சகோதரிக்கு கோரன்டைன்: மகாராஜா குடும்பத்தினருக்கு தனிமை கண்காணிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேக்தா, அமெரிக்காவிலிருந்து திரும்பிய நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூத்தச் சகோதரி கீதா மேத்தா (77).

இவர் அமெரிக்காவில் வசித்துவருகிறார். ஒவ்வொரு ஆண்டும்  மார்ச் மாதம் இந்தியா வருவது வழக்கம்.

அப்போது அவரின் தந்தை பிஜூ பட்நாயக் வசித்த வீட்டில் தங்குவார். வழக்கம்போல் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய அவர், ெகாரோனா அச்சத்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு (கோரன்டைன்) சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை மாநில முதலமைச்சரும் கீதாவின் தம்பியுமான நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் கீதாவின் பெயரை, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலும் இணைத்தார்.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு மாநிலம் முழுவதும் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் கட்டணமில்லா எண் 104 அல்லது மாநில அரசின் கொரோனா குறித்த ஆன்லைன் இணையத்தில் தங்கள் விபரங்களைக் கட்டாயமாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒடிசாவில் வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் தங்கள் பெயர்களை இணையம் மற்றும் ஹெல்ப்லைன் எண் மூலம் பதிவு செய்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும், மக்கள் தங்களது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தைப் பற்றி அரசாங்கத்திற்கு தெரிவிக்குமாறு, வெளிநாட்டில் இருந்து  திரும்பியவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பூரியின் கஜபதி மகாராஜா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து வருகை தருவதாகவும், சுய தனிமைப்படுத்தலுக்குச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்ததற்கு முதல்வர் பட்நாயக் நன்றி தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை