வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு பாஜ தலைவர்கள் மீது வழக்கு பதிய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தினகரன்  தினகரன்
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு பாஜ தலைவர்கள் மீது வழக்கு பதிய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: டெல்லி வன்முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய சூழலில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது என காவல் துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     டெல்லியில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது உத்தரவிட்டிருந்தது இதன்படி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் மிஸ்ரா மீது  வழக்கு பதிவு செய்யு்ம்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.  இந்த நிலையில், டெல்லியில்  நடந்த வன்முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் அமர்வில் நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.    இதில் டெல்லி காவல் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, தனது வாதத்தில், “இந்த வழக்கை பொறுத்தவரை முதலாவதாக தலைமை நீதிபதி அமர்வில் தான் பட்டியலிடப்பட்டது. ஆனால்  சூழ்நிலை காரணத்தால் நீதிபதி முரளிதர் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதில் முதலாவதாக நீதிமன்றத்திற்கு எங்களது தரப்பில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். அதில், முந்தைய விசாரணையின் போது எதிர் தரப்பினர் தாக்கல் செய்த வீடியோ ஆதாரம் என்பது, பல மாதங்களுக்கு முன்பு  பேசப்பட்டது. ஆனால், தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு பிரச்னையை பெரிதாக்க மனுதாரர் தரப்பில் அதை தேடி எடுத்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். ஆனால், அதை முழுமையாக ஆய்வு செய்யாமல் எப்.ஐ.ஆர் பதிவு  செய்ய உத்தரவிடப்பட்டது. இதில் காவல் துறை தரப்பில் விளக்கமளிக்க கூட நீதிமன்றம் நேரம் கொடுக்கவில்லை. மேலும், இந்த வழக்கில் தற்போது எங்களிடம் பல்வேறு கூடுதல் வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனையும் நீதிமன்றம்  ஆய்வு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் டெல்லி போலீசாரின் தரப்பு வாதங்களை முன்வைக்க யார் ஆஜராவது என்பதில் மத்திய மற்றும் டெல்லி அரசுக்கு குழப்பம் நிலவி வருகிறது. அதனால் மத்திய அரசை ஒரு எதிர்வாதியாக சேர்க்க  வேண்டும். மேலும் தற்போது இருக்கும் சுழலில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கண்டிப்பாக முடியாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில், அமைதி மற்றும் இயல்பு நிலை திரும்புவதை  பாதிக்கும். எந்த வகையிலும் நன்மையாக உதவாது. வன்முறையை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும். அதனால் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கையை காவல் துறை தரப்பில் மேற்கொள்ளப்படும்.மேலும் எங்களது தரப்பு  பதிலை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி, அதற்கான கால அவகாசத்தையும் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.  இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோன்சால்வஸ் வாதத்தில்,” இந்த விவகாரத்தை பொறுத்தவரை முதலில் வன்முறையை தூண்டியவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே விசாரணை  மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பா.ஜ தலைவர்கள் தான் வெறுப்புணர்வை தூண்டும் விதமான பேசி போராட்டத்தை கலவரமாக மாற்றியுள்ளனர். இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்” என வாதிட்டார்.  இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் எதிர்மனுதாரராக மத்திய அரசு இணைக்கப்படுகிறது. மேலும் டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை செயலாளர்  மற்றும் எதிர்மனுதாரர்கள் அனைவரும் நான்கு வாரத்தில் பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மூலக்கதை