குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புக்கு இடையே ஆதார் மோசடி புகாரில் 127 பேருக்கு நோட்டீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புக்கு இடையே ஆதார் மோசடி புகாரில் 127 பேருக்கு நோட்டீஸ்

* ஐதராபாத் துணை இயக்குனர் முன் நேரில் ஆஜராக உத்தரவு
* ‘ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல’ என விளக்கம்

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடையே, ஆதார் மோசடி புகாரில் சிக்கிய 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் ஐதராபாத் துணை இயக்குனர் முன் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ‘ஆதார், குடியுரிமைக்கான ஆவணம் அல்ல’ என்று யுஐடிஏஐ விளக்கம் அளித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) என்பது ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளுக்கு வழங்க மக்களுக்கான அடையாள அட்டை) சட்டத்தை கொண்டுவந்தது.

ஆனால், ஆதாருக்கு எதிராக பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் உச்சநீதிமன்றம் ‘ஆதார் செல்லும்’ என்று தீர்ப்பு அளித்ததுடன் சில விதிமுறைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்திய குடிமகன் என்பதற்கு முக்கியமான அடையாளமாக கருதப்படும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியன, மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.



இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) நாடு முழுவதும் சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் யுஐடிஏஐ பிராந்திய அலுவலகத்தின் துணை இயக்குனர் தரப்பில், ஆதார் அட்டையை மோசடியாக பெற்றதாக கூறி 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் நாளை (பிப்.

20) சம்பந்தப்பட்ட யுஐடிஏஐ அலுவலகத்தில் துணை இயக்குநர் முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்டு கணக்கெடுப்புகள் நடப்பதாக கூறி, ஆதார் புகாரில் சிக்கிய 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் பரவின.

இதையடுத்து, யுஐடிஏஐ தரப்பில் நேற்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஆதார் அடையாள அட்டை எண் என்பது குடியுரிமைக்கான ஆவணம் அல்ல; சட்டவிரோத குடியேறியவர்கள் என்று ேபாலீசாரால் சந்தேகிக்கப்படும் நபர்கள், மோசடியாக ஆதார் அட்டை பெற்றுள்ளதாக மாநில காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், சில குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

குடியுரிமை பிரச்னையுடன் ஆதார் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

ஆதார் குடியுரிமைக்கான ஆவணமும் அல்ல. ஒரு நபரின் இருப்பிடத்தை அறிய ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் வழங்க வேண்டாம் என்று யுஐடிஏஐ-க்கு அறிவுறுத்தியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஆதார் சட்டத்தின்படி, தற்போது 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணையின் முடிவில் அவர்கள் மோசடியாக ஆதார் பெற்றதாக தெரியவந்தால், அவர்களின் ஆதார் எண்கள் ரத்து செய்யப்படும்.

அதனால், சம்பந்தப்பட்டவர்கள் ஐதராபாத் பிராந்திய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவறான ஆவணங்களை சமர்பித்து, மோசடி ெசய்து யாராவது ஆதார் பெற்றார்கள் என்பது கண்டறியப்பட்டால், விதிமீறலின் தீவிரத்தை பொறுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட 127 பேரும் தேவையான ஆவணங்களை சேகரிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை