சபரிமலை மேல் முறையீட்டு மனுக்கள் 10 நாட்கள் மட்டுமே விசாரணை: உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சபரிமலை மேல் முறையீட்டு மனுக்கள் 10 நாட்கள் மட்டுமே விசாரணை: உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு

டெல்லி: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரும் மனுக்கள், தாவூதி போரா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்குகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் பார்சி இன பெண்களுக்கு வழிபாட்டுத் தலத்தில் அனுமதி மறுக்கப்படும் விவகாரம் உள்ளிட்டவற்றையும் 9 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.அதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சாந்தனகவுடர், எஸ்.அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வின் முதல் விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் கே.பராசரன், ராஜீவ் தவண், ஏ.எம்.சிங்வி, இந்திரா ஜெய்சிங், வி.கிரி, சி.ஏ.சுந்தரம் ஆகியோர் முன்வைத்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்களை தற்போது விசாரிக்கப் போவதில்லை; 5 நீதிபதிகள் அமர்வால் பரிந்துரைக்கப்பட்ட 7 அம்சங்ளையும் பரிசீலிக்க உள்ளோம்’ என்று வழக்கு 3 வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிைலயில், இவ்வழக்கு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தரப்பில், ‘சபரிமலை வழக்கில் ஏற்கனவே பலதரப்பட்ட வாதங்களும் முடிந்துவிட்டன. வாத பிரதிவாதங்களை மேலும் அதிகரிக்கக் கூடாது’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ‘‘வழக்கு விசாரணை தொடங்கி, அதன்பின் 10 நாட்களுக்கு மட்டும் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அதற்கு மேல் விசாரணை நடக்காது’ என்று அறிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

மூலக்கதை