பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே குடியுரிமை திருத்த சட்டம்,..மத்திய அரசுக்கு 20 கட்சிகள் கண்டனம்: வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என கூட்டாக அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே குடியுரிமை திருத்த சட்டம்,..மத்திய அரசுக்கு 20 கட்சிகள் கண்டனம்: வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் என கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இச்சட்டத்தை வாபஸ் பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளன.  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என ஆளும் பாஜ தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூட்டிய கூட்டத்தில் 20 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, ஜார்கண்ட் முக்தி மோர்சா சார்பில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், லோக் தந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலர் இதில் கலந்து  கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி பேசியதாவது:சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்கின்றனர். சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை மக்களிடையே விரக்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கு எதிரான, உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி போலீசாரின் நடவடிக்கைகள் கொடூரமாகவும், அதிர்ச் சியளிப்பதாகவும் உள்ளன. பிரதமரும், உள்துறை அமைச்சரும் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். கடந்த வாரம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கு முரண்பாடாக தற்போது கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.ஜமியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த வன்முறைக்கு பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாஜ தூண்டுதலினால் ஏற்பட்ட தாக்குதலை இந்த நாடே பார்த்தது. அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், மத்திய அரசு மீதே திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளது.  இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு(என்பிஆர்) மீது மோடி-அமித்ஷா அரசு தற்போது கவனம் செலுத்துகிறது. உள்துறை அமைச்சரின் உறுதிக்கு முரணாக, நாடு முழுவதும் என்ஆர்சியை கொண்டு வருவதற்காக, இந்த பணிகள் நடக்கின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா தற்போது சந்தித்துள்ள உண்மையான பிரச்னை பொருளாதார வீழ்ச்சி. இதற்கு பிரதமர் மற்றும் அமித்ஷாவிடம் பதில் இல்லை. இப்பிரச்னையிலிருந்து  நாட்டு மக்களின் கவனத்தை திசை திரும்ப, அவர்கள் மக்களை பிரித்தாளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சோனியா பேசினார். டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் சமா்ஜ்வாடி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சிவசேனா, பகுஜன் சமாஜ் ஆகிய 6 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.பேசுவாரா மோடி? ராகுல் காந்தி சவால்எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்குப்பின் பேட்டியளித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ‘‘நாட்டின் பொருளாதாரம் ஏன் மோசமான நிலைக்கு சென்றது, வேலைவாய்ப்பின்மை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது ஏன் என பல்கலைக்கழகங்களின் இளைஞர்களின் முன் நின்று பிரதமர் மோடி தைரியமாக பேச வேண்டும். துரதிருஷ்டவசமாக அந்த தைரியம் நாட்டின் பிரதமருக்கு இல்லை. போலீசை வைத்து அவர்களை அடக்குகிறார். பிரதமருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எந்த பல்கலைக்கழகத்துக்காவது சென்று, மாணவர்கள் முன்னிலையில், நாட்டுக்கு அவர் என்ன செய்ய போகிறார் என பேச வேண்டும்’’ என்றார்.

மூலக்கதை