குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தர்ணா; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பிரியங்கா காந்தி தர்ணா; டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம்

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியினர் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி, அகமது படேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார். மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறவும் அவர் வலியுறுத்தினார்.குடியுரிமை சட்ட திருத்த மசோதா நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அஸ்ஸாம், மேகாலயா, திரிபுராவில் ஒருவாரமாக இப்போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை நேற்றிரவு ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இரு போலீஸ் வாகனங்கள் மற்றும் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி போலீசார் நுழைந்து மாணவர்கள் மீது போலீசார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடத்தினர். மேலும் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தினர். இந்த நிலையில் தான் டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

மூலக்கதை