சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைகளை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.

17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடந்து வருகின்றன. 41 நாட்கள் நீளும் மண்டல காலம் வரும் 27ம் தேதி நடக்கும் மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். 450 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கியை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த சித்திரை திருநாள் பாலராம வர்மா சபரிமலைக்கு நன்கொடையாக வழங்கினார்.



இந்த தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மண்டல கால பூஜையையொட்டி தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

இந்தாண்டுமண்டல பூஜையை முன்னிட்டு தங்க அங்கி ஊர்வலம் வரும் 23ம் தேதி புறப்படுகிறது. அன்று காலை 7 மணி அளவில் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஊர்வலம் புறப்படும்.

வரும் 26ம் தேதி மதியம் பம்பையை வந்தடைகிறது. பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக இந்த தங்க அங்கி வைக்கப்படும்.



அதன்பிறகு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாலையில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து இந்த தங்க அங்கி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படுகிறது.

மறு நாள் மண்டல பூஜைகள் நடக்கும்.

அன்றுடன் இந்த ஆண்டு மண்டல காலம் நிறைவடைகிறது.

.

மூலக்கதை