குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தினகரன்  தினகரன்
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கவுகாத்தி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. அசாம், திரிபுரா, மேகாலயா, அருணாச்சல பிரதேசத்தில் பந்த் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவால், வடகிழக்கில் வாழும் பழங்குடியின மக்கள் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமென்ற அச்சம் நிலவுகிறது. இதனால், ஆரம்பத்தில் இருந்தே குடியுரிமை திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு இருந்தது.தற்போது மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வடகிழக்கில் போராட்டம் வெடித்துள்ளது. அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு மாணவர் பேரவை சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் 4 மாநிலங்களிலும் மத்திய பாதுகாப்பு படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடந்தது. அசாமில் மாணவர் பேரவையும், இடதுசாரி அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றன. தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. திப்ரூகரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். சாலை, ரயில் மறியல் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல இடங்களில் பெண்களும் கூட்டம் கூட்டமாக சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். பந்த் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பெங்காலிகள் அதிகம் வாழும் பாரக் பள்ளத்தாக்கு பகுதியிலும் போராட்ட பாதிப்புகள் இருந்தன. திரிபுரா மாநிலத்தில் தாலாய் மாவட்டத்தில், பழங்குடியினர் அல்லாதோர் அதிகளவில் கடை வைத்துள்ள மார்க்கெட்டில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதே போல, மனுகட் பகுதி மார்க்கெட்டிலும் கடைகள் கொளுத்தப்பட்டன.  இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறை, மோதல் காரணமாக மக்கள் வீடுகளுக்கும் முடங்கினர்.அரசு அலுவலங்கள், வங்கிகளில் ஊழியர்கள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டன. மணிப்பூரில் சாலையில் பல இடங்களில் டயர்களை எரித்து பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர். தலைநகர் சில்லாங்கில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டதால் பீதி ஏற்பட்டது. சில இடங்களில் போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. அருணாச்சல பிரதேசத்தில் தனியார் வாகனங்கள், அரசு பஸ்கள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. அங்கும் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. மத்திய அரசு உடனடியாக இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டுமென கோஷமிட்டபடி போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரணி நடத்தினர். இதன் காரணமாக வடகிழக்கு மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. \'இந்து நாடாக்கும் முயற்சி\'மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கொச்சியில் அளித்த பேட்டியில், ‘‘குடியுரிமை சட்டத்தை திருத்துவதன் மூலம், வகுப்புவாதத்தை கூர்மைப்படுத்த விரும்புகின்றனர். இந்திய மக்களை பிரித்து, நமது மதச்சார்பற்ற ஜனநாயக அடையாளத்தை மாற்றி இந்து நாடாக்க முயற்சிக்கின்றனர். இது அரசியல் சாசனத்தின் மீதான நேரடி தாக்குதலாகும்’’ என்றார்.

மூலக்கதை