பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் டாக்டரை எரித்துக்கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவு

ஐதராபாத்: தெலங்கானா போலீசாரால் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுன்டர் சம்பவ வழக்கை, எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்த, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான டிசாவை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருந்தபோது கடந்த 6ம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தாமல்  காவல்துறை என்கவுன்டரில்  சுட்டுக் கொன்றது வன்முறை என்று ஒருதரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.

இதனிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில், சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்களையும் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.

மேலும் இன்று வரை  உடலை பதப்படுத்தி வைக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஐதராபாத் சென்ற 7 பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மகபூப் நகர் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.

மேலும் என்கவுன்டர் இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக  விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை  தெலங்கானா அரசின் தலைமை செயலாளர் எஸ். கே. ஜோஷி அமைத்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘நான்கு பேரின் மரணத்திற்கு வழிவகுத்த காரணங்கள், சூழ்நிலைகள் கண்டறியப்பட்டு உண்மையை நிலைநாட்ட வேண்டி உள்ளது. மேலும் இந்த வழக்கின் உண்மையை உறுதிப்படுத்த முழுமையான விசாரணைக்கு வசதியாக எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.

மேலும், ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ் எம். பகவத் தலைமையிலான எட்டு பேர் கொண்ட எஸ்ஐடி குழு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி என்கவுன்டர் வழக்குகளை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தும்.

எஸ்ஐடி விசாரணையை முடித்து, அவை நீதிமன்றத்தின் முன் அறிக்கையை சமர்ப்பிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை