உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளாட்சித் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்: 5 எதிர்க்கட்சிகள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டை பின்பற்றிய பிறகு தேர்தல் நடத்தக்கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு நாளை மறுநாள் அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு அளித்தது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால், பழைய அறிவிப்பினை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டது.

அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (திங்கள் கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.   வேட்பு மனு தாக்கல் செய்ய டிச. 16ம் தேதி கடைசி நாள் என்றும், வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதியும், மனுக்களை திரும்ப பெற 19ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது.

27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜன. 2ம் தேதி எண்ணப்படும் என்றும், தேர்வாகும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு ஜன.

6ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியாகவில்லை என, திமுக உள்ளிட்ட கட்சிகள் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றன.   இந்நிலையில், இன்று 27 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் ெதாடங்கப்பட்ட நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 5 கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதியதாக இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தற்போது அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அட்டவணையில் எஸ்சி-எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றவில்லை. உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை.

2011 வார்டு வரையறையை பின்பற்றாமல், புதியதாக வார்டு வரையறை செய்து தேர்தல் அறிவித்துள்ளனர்.

 இதுதொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். 7ம் தேதி அறிவித்த தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்.

புதிய அட்டவணையை அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது.   இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, ‘புதியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணை நாளை மறுநாள் (டிச. 11) விசாரிக்கப்படும்’ என்று அறிவித்தனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை போன்று, அதே கோாரிக்கையை வலியுறுத்தி வாக்காளர்கள் தரப்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை