என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் டிஷா (பெயர் மாற்றம்). இவர் கடந்த மாதம் 27ம்தேதி ஐதராபாத் அடுத்த சட்டான்பள்ளியில் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் லாரி டிரைவர்கள் முகமதுஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் நீண்ட நாட்களாக டிஷாவை நோட்டமிட்டு திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக தெரிந்தது.

தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைத்து ஜாமீனில் எடுக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்தின் கீழ் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் டாக்டரை எரித்துக் கொன்றது எப்படி என நடித்துக் காண்பிக்கும்படி போலீசார் ெதரிவித்தனர். ஆனால் அவர்கள் திடீரென போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து, கற்களை வீசி தப்பிச் செல்ல முயன்றனர்.

இதில் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து 4 பேரின் சடலங்களை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் என்கவுன்டர் தொடர்பான பொதுநல வழக்கு தெலங்கானா ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.

விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திரராவ், லட்சுமண் ராவ் ஆகியோர், பலியான 4 பேரின் உடலையும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8. 30 மணி வரை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு நாளை காலை 10. 30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை மகபூப்நகர் கோர்ட்டில் போலீசார் ஒப்படைக்க வேண்டும். மெகபூப்நகர் மாவட்ட நீதிபதி அந்த காட்சிகளை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பின்னர் 4 பேரின் சடலங்களும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

இந்நிலையில், டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற வழக்கில் துப்பாக்கி சூட்டில் பலியான முகமதுஆரிப் உட்பட 4 பேரும், பலாத்கார சம்பவம் நடந்த தினத்தில், டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கியது தொடர்பான சிசிடிவி பதிவுகாட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.
இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் என்கவுன்டர் நடந்த இடத்தையும், மெகபூப்நகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களையும் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று தெலங்கானா டிஜிபி மகேந்திரை சந்தித்து என்கவுன்டர் குறித்து விவரங்களை கேட்க உள்ளனர்.

அழுகும் சடலங்கள்
மெகபூப் நகர் மாவட்ட எஸ்பி ரமா ராஜேஸ்வரி ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு தொடர்ந்தார்.

அதில், என்கவுன்டரில் உயிரிழந்த 4 பேர் உடல் அழுகும் நிலை ஏற்பட்டு வருவதாகவும், இந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உடனடியாக குடும்ப உறுப்பினர்களிடம் வழங்க ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும், மேலும் குடும்ப உறுப்பினர்களும் சடலங்களை கேட்பதாக தெரிவித்தார்.

.

மூலக்கதை