'பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்தேன்' மனம் திறந்தார் சரத்பவார்

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடி அழைப்பை நிராகரித்தேன் மனம் திறந்தார் சரத்பவார்

புதுடில்லி : ''இணைந்து செயல்படலாம் என பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்து விட்டேன்'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தனியார் 'டிவி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:'அரசியலில் இருவரும் இணைந்து செயல்படலாம் வாருங்கள்' என மோடி என்னை அழைத்தார். அதற்கு 'நமக்கிடையே உள்ள தனிப்பட்ட உறவு மிகவும் நன்றாக உள்ளது; அது என்றும் தொடரும். ஆனால் உங்களுடன் என்னால் கைகோர்த்து செயல்பட முடியாது' என தெரிவித்து விட்டேன். மோடி அரசு எனக்கு ஜனாதிபதி பதவி வழங்க முன்வந்ததாக வெளியான தகவல் உண்மையல்ல. அதேசமயம் எம்.பி.யான என் மகள் சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி தருவதாக தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

சரத்பவார் மீது மோடிக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது 'சரத்பவாரை கடுமையாக தாக்கிப் பேச வேண்டாம்' என கட்சியினருக்கு கட்டளையிட்டார்.கடந்த மாதம் ராஜ்யசபாவின் 250வது கூட்டத் தொடர் விழாவில் சரத்பவாரை புகழ்ந்த மோடி 'பார்லி. விதிகளை தேசியவாத காங். எம்.பி.க்களை பார்த்து பா.ஜ. உள்ளிட்ட இதர கட்சியினர் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

கடந்த 2016ல் சரத்பவார் அழைப்பை ஏற்று புனேவில் வசந்த்தாதா சர்க்கரை மைய விழாவில் பங்கேற்ற மோடி 'பொதுவாழ்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சரத்பவார் உதாரணமாக திகழ்கிறார்; அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது; நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அவர் என் கை பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்றதை மறக்க முடியாது' என்றார்.

மூலக்கதை