ஆவேசம்! பாலியல் குற்றம் செய்வோரை தூக்கிலிடுங்கள் ; கிடுகிடுத்தது பார்லி..

தினமலர்  தினமலர்
ஆவேசம்! பாலியல் குற்றம் செய்வோரை தூக்கிலிடுங்கள் ; கிடுகிடுத்தது பார்லி..

'தற்போதுள்ள சட்டங்களால் பயனில்லை என்பதால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை எந்தவித விசாரணையும் இன்றி துாக்கில் போட வேண்டும்; அவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்கும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்' என பார்லிமென்டில் பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் பெண் டாக்டரை நான்கு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன் எரித்து கொலை செய்த விவகாரம் பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று எதிரொலித்தது. லோக்சபா கூடியதும் இப்பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டுமென எம்.பி.க்கள் கோரினர். இருப்பினும் கேள்வி நேரம் முடிந்து 12:00 மணிக்கு இது குறித்து பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதியளித்தார். விவாதம் வருமாறு:

காங்கிரஸ் உறுப்பினர் உத்தம் குமார் சிங்: 'உறவினர்களை அழைத்ததற்கு பதிலாக போலீசாரை அழைத்திருந்தால் அந்த டாக்டர் காப்பாற்றப்பட்டிருப்பார்' என தெலுங்கானா உள்துறை அமைச்சர் கூறியது கண்டனத்திற்குரியது. அங்கு தேசிய நெடுஞ்சாலையில் மது விற்பனை செய்யப்படுகிறது.

தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு: கடந்த நவம்பரில் கோவையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 'டூ இன் ஒன் அரசாங்கம்' போல உங்களது அரசு தான் தமிழகத்திலும் உள்ளது. ஒரு போன் மூலம் கூட இது போன்ற சம்பவங்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.

திரிணமுல் காங். உறுப்பினர் சவுகதா ராய்: தெலுங்கானா உள்துறை அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும்.

பா.ஜ. உறுப்பினர் பந்திகுமார்: வெட்கக்கேடான செயல். குற்றவாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பினாக்கி மிஸ்ரா: நிர்பயா கொலை குற்றவாளிகளை விரைவில் துாக்கில் போட வேண்டும். விரைவு நீதிமன்றங்களால் பயனில்லை. தற்போதுள்ள சட்டங்களால் பயனில்லை. எனவே துாக்கு தான் ஒரே வழி.

டி.ஆர்.எஸ். உறுப்பினர் கவிதா: நிர்பயா வழக்கில் மரண தண்டனை நிறைவேறினால் தான் பயம் வரும். பெண்களை காப்பாற்ற புதிய சட்டங்கள் தேவை.

தேசியவாத காங். உறுப்பினர் சுப்ரியா சுலே: பாலியல் குற்றங்களை துளிகூட பொறுத்துக் கொள்ளக் கூடாது. ஆண் - பெண் என இரு பாலருக்குமே பாதுகாப்பு தரப்பட வேண்டும்.

காங். உறுப்பினர் ஜோதிமணி: கோவையில் 17 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன் பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி ஆபாசமாக 'வீடியோ' எடுத்து மிரட்டிய சம்பவத்தில் மாநில அமைச்சரின் உறவினரே உடந்தையாக இருந்துள்ளார். விரைவான தண்டனை ஒன்றே பாலியல் குற்றங்களுக்கான ஒரே தீர்வு.

சிவசேனா உறுப்பினர் விநாயக் ராவத்: இது போன்ற குற்றவாளிகளை உடனே துாக்கில் போடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

ஒய்.எஸ்.ஆர்., காங். உறுப்பினர் கீதா விஸ்வநாத்: காஷ்மீருக்காக ஒரே நாளில் 370வது சட்டப் பிரிவை நீக்கி தீர்வு காண முடிகிற மத்திய அரசால் பெண்களை காப்பாற்ற உடனே கடுமையான சட்டத்தை கொண்டு வர ஏன் முடியவில்லை?

பகுஜன் சமாஜ் உறுப்பினர் டேனிஷ் அலி: பாலியல் குற்ற விவாதங்களில் அரசியல் வேண்டாம். விசாரணை வைக்காமல் உடனே துாக்கில் போட நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு கூறினர். விவாதத்துக்கு பதிலளித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தெலுங்கானாவில் மிக மிக கொடுமையான, மனிதாபிமானமற்ற செயல் நடந்துள்ளது. இதை எங்கோ ஓரிடத்தில் நடந்ததாக கருத முடியாது. நாடே வெட்கி தலைகுனிந்து நிற்கிறது. 'குற்றவாளிகளுக்கு தண்டனை தாருங்கள்' என எம்.பி.க்கள் அனைவருமே ஒரே குரலில் கேட்கிறீர்கள். டில்லியில் நிர்பயா சம்பவத்தின்போதே கடுமையான சட்டம் இயற்றப்பட்டு விட்டது. இருந்தும்கூட இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பார்லிமென்டில் விரிவான விவாதம் நடத்தலாம்.

இந்த பிரச்னையில் என்ன சொல்வது எப்படி விவரிப்பது என்பதற்கே வார்த்தைகள் இல்லை; அந்தளவுக்கு அதிர்ச்சியாக உள்ளது. புதிய யோசனைகள், பரிந்துரைகள் என எதை வேண்டுமானாலும் ஏற்க அரசு தயாராக உள்ளது. இனிமேல் இது போன்ற குற்றங்களை கனவில் கூட யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடுமையான தண்டனைக்கு வழி வகுக்கலாம்; அதற்கான சட்டங்களை இயற்ற அரசு தயாராக உள்ளது. இவ்வாறு பேசினார்.


தி.மு.க. நிலை என்ன


ராஜ்யசபாவில் தன் பேச்சு குறித்து தி.மு.க. - எம்.பி. வில்சன் அளித்துள்ள உரை குறிப்பில் 'பொள்ளாச்சி பாலியல் கொடுமை மற்றும் ஐதராபாத் டாக்டர் கொலை சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. நாட்டின் மகள்களை காப்பாற்ற வேண்டுமெனில் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதை போல குற்றவாளிகளுக்கு மருத்துவ முறைகள் மூலம் விரை நீக்கம் செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

சபைக்குள் பேசும்போது மரண தண்டனை குறித்து அவர் குறிப்பிடவில்லை. இது குறித்து வில்சனை தொடர்பு கொண்டபோது விளக்கமளிப்பதை தவிர்த்தார். இதையடுத்து 'துாக்கு தண்டனை விஷயத்தில் தி.மு.க.வின் நிலை என்ன' என தி.மு.க.வின் மூத்த எம்.பி.யான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டதற்கு ''துாக்கு தண்டனைக்கு எதிரானவர்கள் நாங்கள்'' என்றார்.

'புதிய சட்டம் இயற்ற துணிச்சல் தேவை'


ராஜ்யசபாவிலும் இந்த பிரச்னை குறித்த விவாதம் நடந்தது. அப்போது சபை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்த சபையில் இதே மாதிரி எத்தனை முறை பேசிவிட்டோம். ஒன்றும் பயனில்லை. இந்த சம்பவமே கடைசியாக இருக்கட்டும்; பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம் தேவை. அதை நிறைவேற்ற அரசுக்கு துணிச்சல் வேண்டும். அதன் மூலம் தான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். காலம் கடந்துவிட்டது;

இனியாவது விழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா பேசுகையில் ''தாமதப்படுத்த வேண்டாம். தினந்தோறும் விசாரித்து 31ம் தேதிக்குள் குற்றவாளிக்கு தண்டனை தாருங்கள். ''ஆபாச படங்கள், மது, போதை வஸ்துகள் எல்லாம் பள்ளிக்கு அருகாமையிலேயே கிடைக்கின்றன.

இவற்றை தடுத்து நிறுத்துங்கள்'' என்றார். அப்போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். ம.தி.மு.க.வின் வைகோ பேசுகையில் ''நாம் அனைவரும் தாயே தெய்வம் என்கிறோம். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்காமல் ஒரு நாள் கூட கழிவதில்லை. இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்'' என்றார். சமாஜ்வாதியின் ஜெயா உள்ளிட்டோரும் விவாதத்தில் பங்கேற்று பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும்படி வலியுறுத்தினர்.
- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை