சபரிமலையில் மண்டல சீசனில் படிபூஜை

தினமலர்  தினமலர்
சபரிமலையில் மண்டல சீசனில் படிபூஜை

சபரிமலை : 18 ஆண்டுக்கு பின் சபரிமலையில் மண்டல காலத்தில் படிபூஜை நேற்று தொடங்கியது. நவ.24 வரை ஆறு நாட்கள் நடக்கிறது.


சபரிமலையில் முக்கிய பூஜைகளில் ஒன்று படி பூஜை. இதற்கு கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். 19 படிகளிலும் பட்டு விரித்து, தேங்காய், பழம், பூ வைத்து குத்து விளக்கேற்றி ஒரு மணி நேரம் இந்த பூஜை நடைபெறும். படியை சுத்தம் செய்து தயார் செய்ய அரை மணி நேரம் ஆகும். இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது.

மண்டல, மகரவிளக்கு காலத்தில் அதிகமான பக்தர்கள் வரும் போது படியேறுவது நிறுத்தப்பட்டால், நெரிசல் ஏற்படும். இதனால் இந்த சீசனில் படிபூஜை 18 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. மாதபூஜை மற்றும் திருவிழா, சிறப்பு பூஜை நாட்களில் மட்டும் படிபூஜை நடத்தப்பட்டு வந்தது.


இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணிக்கு படிபூஜை தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜையை நடத்தினார். பெருமழை காலத்தில் சில படிபூஜைகள் நடத்தப்படாமல் இருந்தது என்றும், அதை தற்போது நடத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டதாகவும், இப்படி பூஜை நவ.24 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆன்லைனில் மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை தரிசன முன்பதிவு செய்த பக்தர்களும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை