அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல்: முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல்: முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு

லக்னோ: அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை ராம் லாலா அமைப்பிடம் ஒப்படைக்கவும், மசூதி கட்ட அயோத்தியில் அரசு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி சன்னி வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) நேற்று அழைப்பு விடுத்திருந்தது.144 தடை உத்தரவை காரணம் காட்டி இந்த கூட்டத்தை நடத்த, உலமாவில் நடத்த உ.பி. லக்னோ மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால், இந்த கூட்டம் மும்தாஜ் கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.  பின்னர், சட்ட வாரியத்தின் செயலாளர் ஜபர்யப் ஜிலானி அளித்த பேட்டியில், ‘‘ஷரியத் சட்டத்தின்படி மசூதி நிலத்தை யாருக்கும் கொடுக்க முடியாது. மசூதிக்கு பதிலாக அயோத்தியில் வேறு இடத்தில் கொடுக்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்க வேண்டாம் என வாரியம் முடிவு எடுத்துள்ளது.மசூதிக்கு மாற்றாக எதுவும் இருக்க முடியாது என்பதுதான் சட்ட வாரியத்தின் கருத்து. கடந்த 1949ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அதை எப்படி வழிபாட்டுக்குரியதாக உச்ச நீதிமன்றம் கருதலாம்? இந்து மதத்தின்படியும், அது வழிபாட்டுக்குரிய சிலைகளாக கருத முடியாது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்படும்,’’ என்றார்.\'ஜாமியத் அமைப்பும் முடிவு\'முஸ்லிம் அமைப்புகளில் மற்றொரு முக்கியமான ஜாமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் செயற்குழு கூட்டமும் நேற்று நடந்தது. அதன் பிறகு, இந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி அளித்த பேட்டியில், ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிரானது. இந்திய அரசியல் சாசன சட்டப்படி மறுபரிசீலனை மனு என்ற வாய்ப்பு உள்ளதால், இது இறுதியான தீர்ப்பு அல்ல. அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்வோம்,’’ என்றார்.

மூலக்கதை