சபரிமலை நடை திறந்தது: துவங்கியது மண்டல காலம்

தினமலர்  தினமலர்
சபரிமலை நடை திறந்தது: துவங்கியது மண்டல காலம்

சபரிமலை:மண்டல கால பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோயிலை வலம் வந்து நடைதிறந்து தீபம் ஏற்றினார்.

மேல்சாந்தி, 18ம் படி வழியாக சென்று, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின், சன்னிதானம் திரும்பினார். அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் வாசு, உறுப்பினர் ரவி, விஜயகுமார் உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர்.

தொடங்கியது மண்டல காலம்



அதிகாலை, 3:00 மணிக்கு சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியவுடன், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது. ஐயப்பனுக்கு நெய் அபிேஷகத்தை தந்திரி துவங்கி வைத்தார். இனிவரும், 41 நாட்களிலும் அதிகாலை, 3:30 மணிக்கு நெய் அபிேஷகம் துவங்கி, பகல், 12:00 மணி வரை நடக்கும்.

கெடுபிடி இல்லை



கோயிலுக்கு, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வருவது தொடர்பான தீர்ப்பு, இறுதி ஆகாத நிலையில், 'பெண்கள் சபரிமலை வந்தால், அரசு பாதுகாப்பு கொடுக்காது. விளம்பரம் தேடுவதற்காக வரும் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு கிடையாது' என, அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார். இதனால், கடந்த ஆண்டு இருந்த போலீஸ் கெடுபிடிகள் தற்போது இல்லை.

இந்நிலையில், ஆந்திரா விஜயவாடாவை சேர்ந்த, 15 பேர் குழுவில், மூன்று பெண்கள் பம்பை வரை வந்தனர். அவர்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். ஆசாரம் தெரியாமல் வந்ததாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.நிலக்கல் வரை மட்டுமே'பக்தர்களின் சிறிய வாகனங்கள், பம்பையில் அவர்களை இறக்கி விட்டு, நிலக்கல்லில் நிறுத்த வேண்டும்' என, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சில மாதங்காளாக சிறிய வாகனங்கள் பம்பை வரை வந்தன.

ஆனால் மண்டல, மகரவிளக்கு காலங்களில் எல்லா வாகனங்களும் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து அரசு பஸ்சில் பம்பை சென்று திரும்ப வேண்டும். இது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை