மஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் இடியாப்ப சிக்கல்!

தினமலர்  தினமலர்
மஹா.,வில் முதல்வரை தீர்மானிப்பதில் இடியாப்ப சிக்கல்!

மும்பை:மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில், சிவசேனா, காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டாலும், முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில், இந்த கட்சிகளுக்குள் இடியாப்பச் சிக்கல் நிலவுகிறது.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த, பா.ஜ., 105 தொகுதி களிலும்; அதன் கூட்டணி கட்சி யாக இருந்த சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தனிப்பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், சிவசேனா கட்சியினர், முதல்வர் பதவியை கேட்டு பிடிவாதம் பிடித்ததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.பல சுற்று பேச்சு நடத்தியும், சுமுக முடிவு ஏற்படாததால், ஆட்சி அமைக்கும் முடிவிலிருந்து, பா.ஜ., பின்வாங்கியது.

சிவசேனா



இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள சரத் பவாரின் தேசிய வாத காங்., மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க, சிவசேனா தலைவர்கள் காய் நகர்த்தினர். இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில், சிவசேனாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார். ஆனால், கவர்னர் விதித்த கெடுவுக்குள், சிவசேனாவால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களை பெறமுடியவில்லை. அடுத்து, தேசியவாத காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தும், அந்த கட்சியும் அவகாசம் கேட்டதையடுத்து, மாநிலத்தில் ஜனாதி பதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில், சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் ஆகியோருடன் தொடர்ந்து பேச்சு நடத்தினர். மூன்று கட்சிகளுக்கு இடையே, குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் இறங்கினர்.

முதல்வர் பதவியை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு விட்டுத் தரவும், மற்ற இரு கட்சிகளும் சம்மதம் தெரிவித்தன. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி, முதல்வர் பதவியை ஏற்க, உத்தவ் தாக்கரே தயங்கி வருகிறார்.தனக்குப் பதிலாக, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் அல்லது தன் மகன் ஆதித்ய தாக்கரே, 29, ஆகியோரில் யாராவது ஒருவருக்கு முதல்வர் பதவியை அளிக்க, உத்தவ் தாக்கரே விரும்புகிறார்.

காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளின் தலைவர்களுக்கு, இதில் உடன்பாடு இல்லை. 'உத்தவ் தாக்கரேவை தவிர, வேறு யாருக்கும் முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது' என, அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

காங்கிரஸ்



உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வராக விருப்பம் இல்லையெனில், தங்கள் கட்சியின் மூத்த தலைவர்களும், முன்னாள் முதல்வர்களுமான அசோக் சவான் அல்லது பிரித்விராஜ் சவான் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு முதல்வர் பதவியை தரும்படி, காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தி வருகிறது.

தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரோ, தங்கள் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் அல்லது சஜ்ஜன் புஜ்பால் ஆகியோரில் ஒருவரை முதல்வராக்க விரும்புகிறார். இதனால், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதில், மூன்று கட்சிகளுக்கும் இடையே இடியாப்பச் சிக்கல் நிலவுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் ஆகியோருடன் சென்று, மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோர, சிவசேனா தலைவர்கள் நேற்று திட்டமிட்டிருந்தனர்.முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இந்த சந்திப்பு நடக்கவில்லை. இன்று, இந்த சந்திப்பு நடக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில், வரும், 22ல் நடக்கவுள்ள மும்பை மேயர் தேர்தலில், சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கப் போவது இல்லை என்றும், காங்கிரசுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், தேசியவாத காங்., கட்சியினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், சிவசேனா தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

குதிரை பேரம் நடத்துவதா?சிவசேனா குற்றச்சாட்டு

சிவசேனா கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:காங்கிரஸ் மற்றும் தேசியவாதகாங்கிரசுடன், சிவசேனா கூட்டு சேர்ந்துள்ளது, பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட சிலருக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. 'இந்த ஆட்சி ஆறு மாதங்கள் கூட நீடிக்காது' என, அவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நினைத்தது எப்போதும் நடக்காது. 'ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை' என, கவர்னரிடம், பா.ஜ., தலைவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். ஆனால், தற்போது மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாக, அவர்கள் கூறுகின்றனர்.

குதிரை பேரம் நடத்தி, எங்கள்கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் தான், இப்படிகூறி வருகின்றனர். அவர்கள்முயற்சியை முறியடித்து, சிவசேனா தலைமையில் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்போம். இவ்வாறு, அதில் எழுதப்பட்டு உள்ளது.

பார்லி.,யில் சிவசேனாவுக்குஎதிர்க்கட்சி வரிசையில் இடம்

வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், இரு சபைகளிலும், சிவசேனா எம்.பி.,க்களுக்கு, எதிர்க் கட்சி வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், நாளை துவங்கவுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலானமத்திய அரசு, மீண்டும் அமைந்த பிறகு நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் இது.இதில், பல முக்கிய மசோதாக்கள் இடம்பெறும் என்பதால், கூட்டதொடரை சுமுகமாக நடத்த, ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.நேற்று, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இந்நிலையில், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று நடக்கும் இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உட்பட மூத்த அமைச்சர்களும் பங்கேற்பர் என தெரிகிறது. இது தவிர, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவும், அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த வரிசையில், ஆளும் தரப்பான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஆலோசனைக்கூட்டம், இன்று நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், ''சிவசேனா சார்பில், யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்,'' என, அக்கட்சியின் மூத்தஎம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

இதற்கிடையே, லோக்சபா, ராஜ்ய சபா இரண்டிலும், ஆளும் கட்சிவரிசையில் அமர்ந்திருந்த சிவசேனா எம்.பி.,க்களுக்கு, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கைகளை ஒதுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.இதனால், கூட்டத்தொடர்துவங்கியதும், பார்லிமென்டின் இரு சபைகளிலும் பரபரப்பு நிலவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை