பிரதமர் மோடியின் வரி இலக்கு: ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடியின் வரி இலக்கு: ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள்

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள வரி வசூல் இலக்கை எட்ட முடியாமல், விருப்ப ஓய்வு பெறும் வரித் துறை உயரதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

'நேரடி வருவாய் வசூலை, 17 சதவீதம் அதிகரிக்க வேண்டும்' என, மத்திய நேரடி வரி வாரியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நடவடிக்கை

முந்தைய ஆண்டுகளிலும் இது போன்ற வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கை அதிகாரிகள் எட்டியுள்ளனர். இந்த நிதியாண்டில், அந்த இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. இந்த நிலையில், நேரடி வரித் துறை உயரதிகாரிகள் பலரும் விருப்ப ஓய்வில் சென்று வருகின்றனர். இதற்கு, மோடியின் இலக்கு தான் காரணம் என, கூறப்படுகிறது.

இது குறித்து, நேரடி வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, வரி வசூலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. இதனால், வரி வசூல் அதிகரித்தது.இந்த நிதி, மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பயன்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த வரி இலக்கை எட்ட முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.நடப்பு நிதியாண்டில், வரி வசூல், 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அடுத்த, ஆறு மாதங்களில், 42 சதவீதம் எட்ட வேண்டிய நிலை உள்ளது. இது மிகவும் கடினமாக இலக்காகும்.இதைத் தவிர, சமீபத்தில், 'கார்ப்பரேட் வரி' விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இலக்கை எட்டுவது என்பது மிகுந்த சிரமமாகவே இருக்கும்.

இதைத் தவிர, வரியை வசூலிப்பதில் அதிக கெடுபிடிகள் இருக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த கெடுபிடிகள் என்பதற்கான எந்த வரையறையும் இல்லை. அதனால், வரி வசூலிக்கும் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.ஒரு பக்கம், வரி வசூலை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் கெடுபிடி கூடாது என்பது அதிகாரிகளின் கையைக் கட்டிப் போட்டுள்ளது.

நெருக்கடி



நேரடி வரித் துறையில், இந்த ஆண்டில், இதுவரை, 22 உயரதிகாரிகள் விலகி உள்ளனர். விருப்ப ஓய்வு கேட்டு இவர்கள் சென்று விட்டனர். மேலும் பலர் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும், 34 அதிகாரிகள் சென்றுவிட்டனர்.பணி நெருக்கடியே, 25 - 30 ஆண்டுகள் அனுபவம் இருந்தும், இந்த அதிகாரிகள் வெளியேறுவதற்கு முக்கிய காரணம். இவர்களில் பலர் வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக சென்று விடுகின்றனர். சிலர் குடும்பத் தொழில், விவசாயம் என, மன நெருக்கடி இல்லாத துறைக்கு மாறியுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை