காற்று மாசை கட்டுப்படுத்த தேவையான நிதி 1.69 லட்சம் கோடி!

தினமலர்  தினமலர்
காற்று மாசை கட்டுப்படுத்த தேவையான நிதி 1.69 லட்சம் கோடி!

புதுடில்லி:நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,நாடு முழுவதும், காற்று மாசை கட்டுப்படுத்த, 1.69 லட்சம் கோடி ரூபாய் தேவை என, 15வது நிதி கமிஷனிடம்,மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தலைநகர் டில்லியில், காற்று மாசு அபாய அளவை விட அதிகமாக இருக்கிறது. இதனால்,
டில்லியே ஸ்தம்பித்துள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.மக்கள், முகமூடி அணிந்துதான், வெளியில் நடமாட வேண்டிய நிலை உள்ளது.பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி.,யில்,விவசாயிகள், பயிர்கழிவுகளை எரிப்பதால், காற்று மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

கடும் கண்டனம்



டில்லி மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில், காற்று மாசு அதிகரித்து உள்ளது. இதற்கு, வாகனங்கள் அதிகளவில் வெளியேற்றும், கார்பன் டை ஆக்சைடு எனப்படும், கரியமலவாயு முக்கிய
காரணமாக உள்ளது. இது பற்றி விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசை கட்டுப்படுத்த தவறியதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பஞ்சாப்,
ஹரியானா மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

ஆனால், இந்தாண்டு, மார்ச் மாதமே, நாடு முழுவதும் மாசை கட்டுப்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 15வது நிதி கமிஷனிடம், நிதி கேட்டு மனு கொடுத்துள்ளது தெரிய வந்து உள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நிதி கமிஷனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள, 1.69 லட்சம் கோடி ரூபாய் தேவை.

இந்த நிதியிலிருந்து, விவசாய கழிவுகளை எரிப்பதை தடுப்பது, மின்சார பஸ்களை வாங்குவது, பசுமை கட்டடங்களை ஊக்கப்படுத்துவது போன்ற, மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்

நவீன கருவிகள்

இந்த நிதியில், 60 சதவீதம், இந்தோ - கங்கை சமவெளி பகுதியில், மாசு கட்டுப்பாட்டு
நடவடிக்கைகள் மேற்கொள்ள செலவழிக்கப்படும். தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த, நவீனகருவிகள் வாங்கப்பட வேண்டும்.கழிவுகள் மேலாண்மை, சுத்தமான தண்ணீர் பராமரிப்பு ஆகிய பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

நிதி கமிஷன் வழங்கும் நிதியில், நகராட்சிகளில், திட கழிவுகள் மேலாண்மை திட்டத்தை
சிறப்பாக செயல்படுத்தவும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, மாசு
கட்டுப்பாட்டு நடவடிக்களை மேற்கொள்ளப்படும்.மாசு கட்டுப்பாட்டில், மாநிலங்கள்
செயல்படுவதை வைத்து, அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, நிதி கமிஷனிடம் வழங்கிய மனுவில்,மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு


காற்று மாசை கட்டுப்படுத்த, ஜப்பானை போல், வாகனங்களுக்கு, ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்துவது பற்றி, டிச., 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில், காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்து வரும், உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக, மத்திய சுற்றச்சூழல்
அமைச்சகத்துக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஜப்பானில், 'பெட்ரோல், டீசல் ஆகியவற்றை பயன்படுத்தி, வாகனங்களை இயக்காமல்,
ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி தான் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அங்கு, காற்று மாசு கட்டுக்குள் உள்ளது. இதை, இந்தியாவிலும் செயல்படுத்துவது பற்றி
ஆலோசிக்க வேண்டும். ஏனெனில், ஹைட்ரஜன் எரிபொருளில், கார்பன் டை ஆக்சைடு

வெளியேற்றம் மிகவும் குறைவு. அதனால், ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்துவது பற்றி,
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் டிச., 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பரிந்துரைகள்

நிதி கமிஷனிடம், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்த, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளதாவது:

* நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்க, 62 ஆயிரத்து, 438 கோடி ரூபாய் தேவை

* தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் நிலைமைகளை சமாளிக்க, 1.35 லட்சம் கோடி ரூபாய் தேவை

* மாநிலங்களில், சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்துவற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்களுக்கு, 4,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்

* மாநிலங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, அவற்றுக்கு நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, சுற்றுச்சூழல் அமைச்சகம்தெரிவித்துள்ளது.

மூலக்கதை