காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணியால் பீதி அரசியலா... சந்நியாசமா? டிச. 11ம் தேதி முடிவு: தெலங்கானா முதல்வர் மகன் கே.டி.ராமராவ் விரக்தி

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ்  தெலுங்கு தேசம் கூட்டணியால் பீதி அரசியலா... சந்நியாசமா? டிச. 11ம் தேதி முடிவு: தெலங்கானா முதல்வர் மகன் கே.டி.ராமராவ் விரக்தி

ஐதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சி தோற்கடிக்கப்பட்டால், அரசியலில் இருந்தே விலகுவதாக அவரது மகன் கே. டி. ராமராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில், 119 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் சந்திரசேகர ராவ், கஜ்வெல் தொகுதியில் வேட்புமனு தாக்க செய்துள்ளார்.

இந்நிலையில், சந்திரசேகர ராவின் மகனும், மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே. டி. ராமராவ் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வருகிற சட்டசபை தேர்தலின் முடிவு நாளான டிசம்பர் 11ம் தேதி நான் அரசியலில் தொடருவதா, இல்லை சந்நியாசம் செல்வதா என்று முடிவு செய்யும் நாள்.

தெலங்கானா தேர்தலில், ராஷ்ட்ரிய சமிதி கட்சி தோற்கடிக்கப்பட்டால், அரசியலில் சந்நியாசம் மேற்கொள்ளத் தயார். அடுத்த 15 ஆண்டுகளுக்கு சந்திரசேகர ராவின் ஆட்சியே தொடரும்.

ராஷ்ட்ரிய சமிதி கட்சியைக் காட்டிலும், தெலங்கானாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து செல்லும் கட்சிகள் வேறில்லை. ஒருவேலை நான் போட்டியிடும் சில்லா தொகுதியில் வெற்றி பெற்றாலும்,  ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் அரசியலை விட்டு விலகி  விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.



தெலங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சியினை தோற்கடிக்கும் நோக்கில், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆனால், பாஜ கட்சி தனித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவதால், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் வெற்றிக்கு வாக்கு சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதனால், தற்போது முதல்வரின் மகனான கே. டி. ராம ராவ், அரசியலை தொடர்வதா அல்லது சந்நியாசம் செல்வதா என்று விரக்தியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

.

மூலக்கதை