ரூ.3,500 கோடியில் மருத்துவ காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.3,500 கோடியில் மருத்துவ காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ராஞ்சி: தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும்.

நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள். அரசு மருத்துவமனைகள் மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.
கடந்த 2011ம் ஆண்டு சமூகப் பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் கிராமப்புறங்களில் 8. 03 கோடி குடும்பங்களும், நகர்புறங்களில் 2. 33 கோடி குடும்பங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதனால்,

 இந்த மாநிலங்கள் நீங்கலாக பிற மாநிலங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் தொடங்கி வைத்தார். அடுத்த 2 மாதங்களில் முழுமையாக நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவரது குடும்பத்தினர் எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை. புற்றுநோய் அறுவை சிகிச்சை, ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி, இதய அறுவை சிகிச்சை, நரம்பு அறுவை சிகிச்சை, தண்டுவடம், பல், கண் அறுவை சிசிச்சை என 1,350 சிகிச்சைகளை இத்திட்டம் கொண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ. 3,500 கோடி செலவாகும்.

இதற்கு ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ. 2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டச் செலவில் 60 சதவீதத்தை மத்திய அரசும் 40 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் மாநில அரசு, அனைத்து குடும்பங்களையும் இத்திட்டத்தில் இணைக்க முடிவு செய்துள்ளதாக, அம்மாநில முதல்வர் ரகுபர்தாஸ் தெரிவித்தார்.

.

மூலக்கதை