கொலை வழக்கில் சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்'

தினமலர்  தினமலர்
கொலை வழக்கில் சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ்

புதுடில்லி: 'கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஏன் தண்டனை வழங்க கூடாது' என கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், காங்., தலைவருமான சித்து, தற்போது, பஞ்சாப் மாநில அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், 1988ல், சாலையில் ஏற்பட்ட சண்டையில், 65 வயதான குர்னாம் சிங் என்பவரை தலையில் தாக்கினார்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, குர்னாம் சிங் உயிரிழந்தார். இதையடுத்து சித்து மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், சித்துவுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

ஜாமினில் வெளியே வந்த சித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், 2007ல், சித்துவை விடுவித்து, உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டது. இந்நிலையில், குர்னாம்சிங் கொலை வழக்கில், நீதி மறுக்கப்பட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்துவுக்கு ஏன் தண்டனை வழங்க கூடாது என கேள்வி எழுப்பி, நீதிபதிகள், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.

மூலக்கதை