வீடுதேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு பெரும் வரவேற்பு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
வீடுதேடி வரும் அரசு சேவை திட்டத்துக்கு பெரும் வரவேற்பு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி

புதுடெல்லி: டெல்லியில் ‘வீடு தேடி வரும் ரேசன் பொருட்கள் சேவை திட்டம்’ மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சாதி சான்று, திருமணச்சான்று உள்ளிட்ட 40 வகையான அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். ஒரே நாளில் சுமார் 25,000 பேர் அரசின் சேவையை பெற கால் சென்டருக்கு போன் செய்துள்ளனர். இரண்டாம் நாளான நேற்றும் ஆயிரக்கணக்கானோர் போன் செய்து சேவை பெறுவதற்கான விளக்கங்களை கேட்டனர். இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு, திட்டத்தை மேலும் செம்மையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது நாளான நேற்று மாலை 5 மணி வரையில், ஒட்டுமொத்தமாக சுமார் 13,783 அழைப்புகள் வரப்பெற்றது. இந்த திட்டம் குறித்து கெஜ்ரிவால், அமைச்சர்களுக்கு விடுத்துள்ள உத்தரவில், ‘‘வீடு தேடி வரும் சேவைகள் திட்டத்தின் கீழ் எந்த கோரிக்கை அல்லது விண்ணப்பமாவது நிராகரிக்கப்பட்டால், அது மக்கள் நலம் சார்ந்த திட்டத்தை சீர்குலைக்கும் செயலாக கருதப்படும். இது ஊழல் செய்யப்படுவதாகவும் கருதப்படும். விண்ணப்பம் அல்லது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அதற்கு அத்துறையின் அமைச்சரின் ஒப்புதல் அவசியம் பெறப்பட்டிருக்க வேண்டும். அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் தினசரி அடிப்படையில் இது தொடர்பான அறிக்கை முதல்வர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார்.

மூலக்கதை