ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைப்பு

தினகரன்  தினகரன்
ராஜஸ்தான், ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 குறைப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தினம், தினம் வரலாற்று உச்சத்தை அடைந்து வருவதை கண்டித்து நேற்று முன்தினம் நாடு தழுவிய அளவில் பந்த் நடத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநில அரசு வாட் வரியை குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50வீதம் குறைப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை சற்று குறையும். இதேபோல் ஆந்திராவிலும் பெட்ரோல், டீசல் மீதான விலையில் தலா ரூ.2 குறைத்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று மேற்குவங்க அரசும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாயை குறைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “தற்போதைய சூழலுக்கு பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா ஒரு ரூபாய் குறைக்கப்படுகின்றது. மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை குறைக்க வேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும் பாஜ தலைமையிலான மத்திய அரசு கலால் வரியை ஒன்பது முறை உயர்த்தியுள்ளது” என்றார்.

மூலக்கதை