வடமேற்கு திசை நோக்கி நகரும் வாயு புயல் சவுராஷ்டிரா கடலோர மாவட்டங்களை முதலில் தாக்கும்: இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
வடமேற்கு திசை நோக்கி நகரும் வாயு புயல் சவுராஷ்டிரா கடலோர மாவட்டங்களை முதலில் தாக்கும்: இந்திய வானிலை மையம்

குஜராத்: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயல் குஜராத்தில் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் சவுராஷ்டிரா கடலோர மாவட்டங்களை முதலில் தாக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வாயு புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது 155-165 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடி மின்னலுடன் மழை பெய்யும் கடலோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடல் தண்ணீர் புகுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 மாவட்டங்களில் இந்தப் புயல் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ரேலி, கிர் சோம்நாத், ஜூனாகர், போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், தேவ்பூமி, துவாரகா, குட்ச் ஆகிய இடங்களை புயல் தாக்கும் என கூறப்படுகிறது. கடலோரம் உள்ள 500 கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். குஜராத் கடலோர நகரங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் புயல் வீசக்கூடிய வட்டாரங்களில் இருந்து 10,000 சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புயல் மீட்புப்பணியில் ஈடுபட 36 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் குஜராத்திற்கு விரைந்துள்ளன. கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த சுமார் 4 ஆயிரம் மீன் பிடி படகுகள் நேற்று கரை திரும்பின. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் நிவாரண முகாம்கள் அமைக்கவும், உதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குஜராத் மாநிலத்தின் 9 மாவட்டத்தில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 3.5 லட்சம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் குடி தண்ணீர், மருந்துகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கு ரெயில்வே சுமார் 50 ரயில்களை ரத்து செய்துள்ளது. ஆனால், போர்பந்தர், பவன்நகர், கெசோத் மற்றும் கண்ட்லா விமானநிலையங்கள் மூடப்படுவதாக, இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அவற்றில் வந்து செல்லும் அத்தனை விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை