பாஜ நாடாளுமன்ற நிர்வாக குழு அறிவிப்பு மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடி தேர்வு: 3 பெண் கொறடாக்களும் நியமனம்

தினகரன்  தினகரன்
பாஜ நாடாளுமன்ற நிர்வாக குழு அறிவிப்பு மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடி தேர்வு: 3 பெண் கொறடாக்களும் நியமனம்

புதுடெல்லி: பாஜ நாடாளுமன்ற கட்சி நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடியும், மாநிலங்களவை பாஜ தலைவராக மத்திய அமைச்சர் தவார்சந்த் கெலாட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலில் பாஜ 303 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மாநிலங்களவையிலும் 70 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த  கூட்டத்தில் பாஜ நாடாளுமன்ற நிர்வாக குழு நியமிக்கப்பட்டது. இதில், மக்களவை பாஜ தலைவராக பிரதமர் மோடியும், துணைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநிலங்களவை பாஜ தலைவராக மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். பாஜ நாடாளுமன்ற கட்சியின் தலைமை கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால்  நியமிக்கப்பட்டார். இவருடன் மேலும் 6 பேர் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, நாடாளுமன்ற பெண் எம்பி.க்களுக்காக முதல் முறையாக 3 பெண் எம்பி.க்கள் கொறடாவாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பல்வேறு  மாநிலங்களை சேர்ந்த 15 எம்பி.க்கள் மக்களவை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத், அர்ஜூன் முண்டா,  நரேந்திர சிங் தோமர், ஜூவல் ஓராம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மாநிலங்களவை குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ஓம் பிரகாஷ் மாதூர், நிர்மலா சீதாராமன், பிரதான், பிரகாஷ் ஜவடேகர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.பாஜ நாடாளுமன்ற விவகாரங்களின் அலுவலக பொறுப்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியாவும், பாலசுப்பிரமணியம் குமாரசு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜ நாடாளுமன்ற நிர்வாக குழுவில்  நீண்ட காலமாக இடம் பெற்றிருந்த மூத்த தலைவர்கள் அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் தற்போது எம்பி.க்களாக இல்லாததால், இந்த குழுவில் இடம் பெறவில்லை.

மூலக்கதை