மேத்தா மீது மேலும் 2 வழக்குகள்

தினமலர்  தினமலர்
மேத்தா மீது மேலும் 2 வழக்குகள்

புதுடில்லி: வங்கிகளில், 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி, ஜதின் மேத்தா மீது, சி.பி.ஐ., மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.


குஜராத்தைச் சேர்ந்தவர் ஜதின் மேத்தா. வைர வியாபாரியான இவர், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து, 'வின்சம் டைமண்ட்ஸ் அண்ட் ஜுவல்லரி' என்ற, நிறுவனத்தை நடத்தி வந்தார். நிறுவனத்தை மேம்படுத்த, பல்வேறு வங்கிகளில், 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கினார். ஆனால், அதை திருப்பி செலுத்தாமல், கடந்த, 2016ல், மேற்கிந்திய தீவுகளுக்கு தப்பியோடி விட்டார். இதன்பின், வங்கிகள் அளித்த புகாரின்படி, சி.பி.ஐ., இது பற்றி விசாரித்து வருகிறது. அவர் மீது, இதுவரையிலும், ஏழு வழக்குகளை, பதிவு செய்துள்ளது.


இந்நிலையில், ஜதீன் மேத்தா மீது, மேலும், இரண்டு மோசடி வழக்குகளை, சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. 'பாங்க் ஆப் மஹாராஷ்டிரா' வங்கி, தங்களிடம், 322.40 கோடி ரூபாயும், 'யூனியன் பாங்க் ஆப் இந்தியா' வங்கி, தங்களிடம், 264.15 கோடி ரூபாயும் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, ஜதின் மேத்தா மீது, சி.பி.ஐ.,யிடம் தனித்தனியாக புகார் அளித்தன. இதன்படி, சி.பி.ஐ., இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஜதின் மேத்தா, மேற்கிந்திய தீவில் உள்ள செயின்ட் கிட்சில் பதுங்கியுள்ளது, தெரிய வந்துள்ளது. அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மூலக்கதை