தூத்துக்குடியை போல் வேதாந்தா நிறுவனத்தை கண்டித்து போராட்டம்: போலீஸ் தடியடியில் 2 பேர் பலி...ஒடிசா மாநிலத்தில் பதற்றம்; 144 தடை உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடியை போல் வேதாந்தா நிறுவனத்தை கண்டித்து போராட்டம்: போலீஸ் தடியடியில் 2 பேர் பலி...ஒடிசா மாநிலத்தில் பதற்றம்; 144 தடை உத்தரவு

பவானிபாட்னா: ஒடிசா மாநிலம் அடுத்த பவானி பாட்னாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250  ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் உள்ளூர் மக்களுக்கு  வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், உள்ளூர்  மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பிரதான வாயிலில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.   அவர்களை, ஓஐஎஸ்எப் (மாநில தொழில் பாதுகாப்பு படை)  போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது போராட்டக்காரர்கள் ஆலைக்கு முன்பாக முற்றுகையிட்டு, ஆலைக்குள் நுழைந்தனர்.

அவர்களை போலீசார் தடுத்த நிறுத்திய போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, கூட்டத்தைக் கலைக்க போலீசார் போராட்டக்காரர்கள் மீது  தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த தாக்குதலில் தானி பத்ரா (45) என்பவர் உயிரிழந்தார்.

மற்ெறாருவர், போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு  கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 40க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் லான்ஜிகர், விஸ்வானந்தபூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்து போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்ட நிர்வாகம்  லான்ஜிகரில் நேற்றிரவு முதல் 144 தடைஉத்தரவு அமல்படுத்தி உள்ளது.



தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த சில மாதங்களுக்கு  முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதில், கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீசாரால்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை