ஒரு சர்ச்சிற்கு உரிமை கோரும் இரு தரப்பினர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த சென்ற போலீசார் தடுத்து நிறுத்தம்

தினகரன்  தினகரன்
ஒரு சர்ச்சிற்கு உரிமை கோரும் இரு தரப்பினர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல்படுத்த சென்ற போலீசார் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே ஒரு சர்ச்சிற்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடிய விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த சென்ற போலீசாரை ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்தினர். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் பிறவம் என்ற இடத்தில் செயின்ட் மேரீஸ் சர்ச் அமைந்துள்ளது. இந்த சர்ச் வழிபாட்டு உரிமைக்காக யாகோபாயா மற்றும்  ஆர்த்தடாக்ஸ் பிரிவினர் இடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வருகிறது. இது  தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு  முன் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிர்வாக பொறுப்பை  ஆர்த்தடாக்ஸ் சபைக்கு வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த  நேற்று போலீசார் பிறவம் தேவாலயத்திற்கு சென்றனர். போலீசாரிடம் ஆர்த்தடாக்ஸ்  சபையினரும் ஏராளமானோர் சென்றனர். இது குறித்து அறிந்த யாகோபாய பிரிவைச்  சேர்ந்த பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர். தேவாலய கேட்டை இழுத்து  மூடினர். பெண்கள் உட்பட ஏராளமானோர் தேவாலய மாடிக்கு சென்று தற்கொலை  செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர். சிலர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியும்  வேறு சிலர் சர்ச்சில் மாடியில் இருந்து கீழே குதிக்கப்போவதாகவும் மிரட்டல்  விடுத்தனர். இதுகுறித்து அறிந்ததும் எர்ணாகுளம் எஸ்பி ராகுல்  ஆர்.நாயர் தலைமையில் கூடுதல் போலீசார் விரைந்தனர். அவர்கள் யாகோபாய  சபையினரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த  ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு யாகோபாய  சபையினர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறி போலீசார் திரும்பி சென்றனர்.

மூலக்கதை